அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர்வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தகங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது புத்தக விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர விழாவில் உரையாற்றும் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
"ஒரு புத்தகத்தின் விலை ஐந்தில் ஒரு பங்கு - அதாவது 20% வரை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். முன்பு எழுதுபொருட்கள் உட்பட பல உத்தியோகபூர்வப் பொருட்களுக்கு 15% VAT இருந்தது உண்மைதான். ஆனால், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரி இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்," என அவர் குறிப்பிட்டார்.
இந்தீவர மேலும் தெரிவிக்கையில், "தற்போது நேரடியாக 0% இலிருந்து 18% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. எழுதுபொருட்களுக்கு வெறும் 3% மட்டுமே இருந்த நிலையில், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு இந்த திடீர் வரி அதிகரிப்பு கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது."
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து VAT தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும், பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட பதில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொட ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், "உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு புத்தகங்களுக்கு VAT விதிக்கப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT, 2024 ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டதால் புத்தக விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடருமானால், ஒரு குழந்தைக்குக்கூட புத்தகம் வாங்க முடியாத நிலை ஏற்படும்" என எச்சரித்தார்.
இந்த வரி விதிப்பானது கல்வி மற்றும் வாசிப்புப் பழக்கத்தை பாதிக்கும் என்றும், இது குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் புத்தக வர்த்தகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..