01,Jul 2025 (Tue)
  
CH

செம்மணி சம்பவத்திற்கு "அரசியல் சாக்கடையில் உள்ள சில அரசியல்வாதிகளே" காரணம்: அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

செம்மணிப் போராட்டக் களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு "அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே" காரணம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இன்றைய (30.06.2025) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:


"செம்மணிப் புதைகுழிப் பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினை. கிருஷாந்தியின் கொலை என்பது பல வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இதற்கு நீதி கிடைக்க வேண்டும். செம்மணிப் புதைகுழியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்ட உடல்களை பரிசோதனை செய்வதற்கான இயந்திரங்களைப் பெற்றுத் தருமாறு கூட இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா ஆணையாளரிடம் கேட்டிருந்தோம்.


செம்மணியில் போராட்டம் இடம்பெற்ற போது நானும் அங்கு சென்றிருந்தேன். அங்கு பத்து முதல் பதினைந்திற்கு இடைப்பட்டோர் எங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நான் முதலில் சென்று அந்த மக்களை சந்தித்தேன். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு திட்டமிட்டு ஏவப்பட்டிருக்கின்ற கும்பலால் ஏற்படுத்தப்பட்ட செயற்பாட்டினாலே அங்கு குழப்பம் ஏற்பட்டது.


நிச்சயமாக அங்கிருக்கும் மக்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை. மக்கள் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவுமில்லை. மக்களுடைய பிரச்சினைகளை சென்று பார்ப்பதற்கு நான் சென்றேன். அங்குள்ள மக்கள் இன்று கூறுகின்றார்கள், இவ்வாறான ஒரு பிரச்சினையை பார்ப்பதற்கு ஒரு அரசாங்கத்தினுடைய அமைச்சரவை அமைச்சர் வருகை தருவது என்பதே அந்தப் பிரச்சினைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். அந்த அங்கீகாரத்தை குழி தோண்டி புதைக்கின்ற வகையில் அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே அந்த அசம்பாவிதத்திற்கு காரணம்." என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.




செம்மணி சம்பவத்திற்கு "அரசியல் சாக்கடையில் உள்ள சில அரசியல்வாதிகளே" காரணம்: அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு