ஹட்டன் நீர் விநியோகச் சபை, சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டன் நகருக்கான நீர் பெறுதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால், பயனாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டு, ஆறு மணி நேரமாக வழங்கப்படும் என ஹட்டன் நீர் விநியோகச் சபையின் பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (ஜூலை 8) சிங்கமலை ஆற்றில் 17 வயது மாணவன் தவறி விழுந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 10) அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர் சௌந்தர்ராகவன் மற்றும் நீர் விநியோகச் சபை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சிங்கமலை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆற்றின் நீர் மாதிரி பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.
ஆய்வறிக்கை கிடைக்கும் வரை சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் பெறப்படாது எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
0 Comments
No Comments Here ..