மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (ஜூலை 10) மாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை, தாய் மற்றும் 12 வயது சகோதரி ஆகியோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இன்று மாலை தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நால்வரும் மோட்டார் சைக்கிளில் நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியை முருங்கன் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..