குஜராத் மாநிலம், வடோதரா மாவட்டம், பத்ரா தாலுகாவில் உள்ள மகிசாகர் (மகி) ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. கம்பீரா மற்றும் முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் நேற்று காலை இடிந்து விழுந்தபோது, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து பலரையும் மீட்க உதவினர். தகவல் அறிந்ததும் பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனந்த் மாவட்டத்தையும், வடோதரா மாவட்டத்தையும் இணைக்கும் முக்கியப் பாலமாக இது இருந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், "மத்திய குஜராத்தையும், சவுராஷ்டிரா பகுதியையும் இணைக்கும் மிக முக்கியப் பாலம் இது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பாலத்தை அதிகாரிகள் பராமரிப்பில் அலட்சியமாக இருந்தனர். இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் இடமாகவும் இது இருந்தது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினர்.
குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனப் பிரதமரும் அறிவித்திருந்தார்.













0 Comments
No Comments Here ..