இலங்கையில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கெஹல்பத்தர பத்மே, அவரது தவறான தொடர்பில் உள்ள பெண் மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் இலங்கைப் பொலிஸாருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் கடந்த 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தக் கைது செய்தியை இலங்கை பொலிஸாரும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து, அவர்களை இலங்கைக்கு அழைத்து வர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் குழு ஒன்று மலேசியாவுக்கும், மற்றொரு அதிகாரிகள் குழு தாய்லாந்திற்கும் அனுப்பப்பட்டன.
எனினும், பத்மே மற்றும் அவரது சகாக்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் குற்றவாளிகளைப் பிடித்துக் கொண்டு வருவதில் உள்ள சவால்களை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
0 Comments
No Comments Here ..