பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளையும் இனப்படுகொலைச் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்தில் விசாரித்தால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சம்மதமின்றி இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால், தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் அல்லது இலங்கை தொடர்பாக ஒரு குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டு முழுமையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதினர்.
நிலைப்பாட்டில் முரண்பாடு மற்றும் செம்மணி விவகாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்தபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஆணையாளரிடம் வழங்கியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். இந்தக் கடிதத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கையொப்பமிட்டிருந்தார்.
எனினும், அந்தக் கடிதம் வழங்கப்பட்ட அடுத்த வாரமே, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடம் விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தைக் கோரியதுடன், ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு என பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். செம்மணியில் நடந்தது அநீதி என்றும், இலங்கை அரசு இதனை மூடி மறைக்க முயன்ற நிலையில், தற்போது வெளிவந்துள்ள ஆதாரங்களை மூடி மறைக்கின்ற சந்தர்ப்பங்களை இந்த நடவடிக்கை வழங்குவதாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காக, எதிர்வரும் வார இறுதியில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும், மனித உரிமை அமைப்புகளையும் ஓரிடத்தில் சந்தித்து, 2021 ஜனவரி 15 அன்று எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் இறுக்கமாக அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு கூட்டம் நடத்த அழைப்பு விடுப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பு அனைத்து தரப்பினருக்கும் அனுப்பப்படும் என்றும், மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக ஊடகங்களையும் சந்திக்க வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் தமிழினம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான முழு வரலாற்றையும் விசாரிக்க வேண்டும் என பொன்னம்பலம் வலியுறுத்தினார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அது 1948 இலிருந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாகவும் பின்னர் நேரடியாகவும் நடைபெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார். உண்மையான நீதிநியாயத்தைப் பெறக்கூடிய ஒரு அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்த ஒரு கட்சியும் இந்த முடிவுக்கு இணங்கிவிட்டு வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்றும், இலங்கை தமிழரசு கட்சி எடுத்த முடிவை போல வேறு எவரும் செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். செம்மணி எந்தளவுக்கு இன்று முக்கியத்துவம் பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு போர் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற அநீதிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகள் மற்றும் இனப்படுகொலைச் செயற்பாடுகள் அனைத்தையும் ஒரு சந்தர்ப்பத்தில் விசாரித்தால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், அந்த அடிப்படையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாக அமைய வேண்டும் என்றும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
0 Comments
No Comments Here ..