ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) இரவு பல்கலைக்கழக வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் 4 முதலாமாண்டு மாணவர்களும், ஒரு சாரதியும் காயமடைந்து, ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதமும் இதேபோன்ற பகிடிவதைச் செயல்கள் தொடர்பில் 22 மூத்த மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குழுவொன்று, முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து, அவர்களை முழந்தாளிடச் செய்து தாக்குதல் நடத்தியது பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் தொடரும் பகிடிவதை மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து பெற்றோர் மற்றும் சமூகவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
0 Comments
No Comments Here ..