தியதலாவ இராணுவ வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் இலங்கை மாணவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் சிலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது.
அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வின் ஊடாக கண்டறிப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வூஹான் நகர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்து வெளியேறவும் உள் நுழையவும் சீன அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது.
எனினும், ஹூபே மாகாணத்தின் வூஹான் நகருக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் 33 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தியதலாவ இராணுவ வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு குறித்த மாணவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்படாத நிலையில், இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments
No Comments Here ..