ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட். மறுபுறம் கைது செய்வதற்காக தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதே போன்று தன்னுடைய மரணத்திற்கு பின்னர் தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும் என்றும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஒரு வீடியோவில் தொடர்ந்து பேசி கொண்டிருக்கும் நித்தியானந்தா, தமிழகத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இனிமேல் வரப்போவதில்லை என்றும், தமிழக ஊடககங்களை பொறுத்தவரை தான் இறந்து விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தான் இறந்தாலும் தனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
காவல்துறையினர் நித்தியானந்தாவை தேடி கொண்டிருக்க அவரோ, உலகின் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தனது ஆன்மிக பணியை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். வாடிகனை போல இந்து மதத்திற்கு என ஒரு நிலத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறி விட்டதாக தெரிவித்துள்ள நிலையில், கைலாசா குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ஏங்கி கொண்டிருக்கின்றனர் நித்தியானந்தாவின் விசுவாசிகள்.
0 Comments
No Comments Here ..