09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்ட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், “எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ரஷ்யா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ரஷ்யா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எங்கள் தேர்தலில் தலையிடக் கூடாது. ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு எதேச்சதிகார குண்டர் ஆவார். அவரது அரசு நமது நாட்டில் பிரிவினையை உண்டாக்க இணையப் பிரசாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

நான் தெளிவாகச் சொல்கிறேன். நம்மில் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிட விரும்புகிறார்கள் என்றால், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பைப் போல் இல்லாமல், அவர்களின் முயற்சிகளுக்கு எதிராக நான் நிற்பேன். அது மட்டுமின்றி எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் எதிராக நான் உறுதியாக நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா தலையிட்டு குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயற்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ரொபேர்ட் முல்லர் தலைமையில் அமெரிக்காவில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதற்கு ஆதாரங்கள் இல்லை என ரொபேர்ட் முல்லர் விசாரணைக்குழு 448 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. அதேநேரத்தில் விசாரணையை ட்ரம்ப் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் ஜனாதிபதி ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதால், அங்கு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் செனட் சபை உறுப்பினர் பெர்னீ சாண்டர்ஸ் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா மீண்டும் தலையிட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா இணையதளம் மூலம் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற உளவுக் குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் ‘தி வொஷிங்ரன் போஸ்ற்’ நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதில் முன்னிலையில் உள்ள பெர்னீ சாண்ட்ர்ஸ் பிரசாரத்தில் ரஷ்யா உதவுவதற்கு முயற்சிகள் செய்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடமும், பிற அமெரிக்க உறுப்பினர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் எந்த விதத்திலும் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடும் முயற்சிக்கு பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.




அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு