கடந்த இரண்டு மாதங்களாக சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,500க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், வனவிலங்குகள் வர்த்தகமே இந்த வைரஸின் பரவலுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். சீனர்கள் வனவிலங்குகளை உண்பதால் அவற்றில் இருக்கும் வைரஸ் மனிதர்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனவிலங்குகள் வர்த்தகம் மற்றும் நுகர்விற்கு உடனடியான தடையை சீனா அமல்படுத்தியுள்ளது. சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக தடுப்பு, நுகர்வு உள்ளிட்டவற்றை தடைசெய்வதற்கான முடிவிற்கு பாராளுமன்றத்தின் உயர்மட்ட கமிட்டி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
முன்னதாக இதே போன்று சார்ஸ் வைரஸ் (2002-03) பரவிய போது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
சீனாவில் வனவிலங்கு நுகர்வு மற்றும் வனவிலங்கு துன்புறுத்தல் ஆகியவை தொடர்கதையாகிப் போன சூழலில் இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. வனவிலங்குகளில் மருத்துவ குணம் இருப்பதாக ஆண்டாண்டுகாலமாக நம்பப்பட்டாலும் கூட அவற்றை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தவில்லை.
சார்ஸ், கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல்களுக்கு வனவிலங்குகள் நுகர்வே மையமாக இருப்பதால் சீன அரசின் இந்த தடை நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுவரை 2,592 பேர் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 77,000 பேரை பாதித்துள்ளது.
0 Comments
No Comments Here ..