13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இதே நாள் வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதத்தை பதிவுசெய்து புதிய சாதனை படைத்தார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிதான் தலைசிறந்த இந்திய அணி என்று கருதப்படுகிறது. தனது இறுதிக் கட்டத்தில் இருந்த சச்சினும் தனது துவக்க காலத்தில் இருந்த கோலியும் ஒரே சமயத்தில் விளையாடிய நாட்கள் அவை. உலகக் கோப்பைக்கு முன்பாக இரண்டு ஆண்டுகளாகவே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி அபாயகரமான அணியாக வலம் வந்தது. உலகக் கோப்பையை வென்ற கையோடுதான் ஓய்வுபெற வேண்டும் என்பதே சச்சினின் ஆசையாக இருந்தது.

2010 பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க அணி இந்தியா சுற்றுப்

பயணம் வந்திருந்தது. இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இதேநாளில் (பிப்ரவரி 24) குவாலியர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனையை வரலாற்றுப் புத்தகத்தில் எழுதினார். அதுவரை ஆண்கள் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் அச்சாதனையைப் படைக்கவில்லை. இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்று பெருமை சச்சினுக்கு அன்று கிடைத்தது.

முதலில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரராக விரேந்திர சேவாக்குடன் களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர். சேவாக் 9 ரன்களில் வெளியேற, மூன்றாவது வீரராக வந்த தினேஷ் கார்த்திக் சச்சினுக்கு நல்ல பார்ட்னர்ஷிக் கொடுக்க, மறுபுறம் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த சச்சின் 9 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் மிடில் ஓவர்களில் நிதானமாக விளையாடிய சச்சின் 90 பந்துகளில் சதம் விளாசினார்.

35ஆவது ஓவரில் பேட்டிங் பவர்பிளேயை கையிலெடுத்த இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 40 ஓவர்களில் 300 ரன்களைக் கடந்த இந்திய அணி 45 ஓவர்களில் 350 ரன்களை எட்டியது. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தவுடன் வந்த யூசுப் பதானும் சிறிது நேரத்தில் வெளியேற சச்சினுடன் இணைந்தார் கேப்டன் தோனி. மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் மெல்ல மெல்ல இரட்டைச் சதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கெனவே ஒருமுறை நியூசிலாந்துக்கு எதிராக 186 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டைச் சத வாய்ப்பை நழுவவிட்டார்.

சயீத் அன்வர் (194 அவுட்), சார்லஸ் காவெண்ட்ரி (194 நாட் அவுட்), விவியன் ரிச்சர்ட்ஸ் (189 நாட் அவுட்), ஜெயசூரியா (189 அவுட்), கேரி கிரிஸ்டன் (188 நாட் அவுட்) உள்ளிட்ட பலர் இச்சாதனைக்கு மிக அருகில் வந்து இரட்டைச் சத வாய்ப்பை நழுவவிட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான போட்டி போல் இல்லாமல் இந்த முறை சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதத்தை நெருங்கியவுடன் மிகவும் நிதானமாக விளையாடி ஒவ்வொரு ரன்களாகச் சேர்த்தார். கார்லஸ் லாங்கிவெல்த் பந்தில் ஆஃப் திசையில் தட்டி விட்ட சச்சின் 200 ரன்களைப் பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி, சச்சின் நிகழ்த்தாத பேட்டிங் சாதனைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு சாதனைப் புத்தகத்தில் இடமே இல்லாத வகையில் பல சாதனைகளைத் திருத்தி எழுதியவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்காமல் ரன் சேர்க்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறையை மாற்றி எழுதிய மிகச் சிலர்களில் சச்சின் ஒருவர்.

2011 உலகக் கோப்பையை வென்ற கையோடு, தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்ட சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பிரியா விடை பெற்றார். இருந்தாலும் சச்சின் டெண்டுல்கரையும், அவர் நிகழ்த்திய சாதனைகளையும் யாராலும் மறக்க முடியாது. சச்சின் டெண்டுல்கர் இன்றைய தினத்தில் நிகழ்த்திய சாதனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து சிறப்பித்துள்ளது.




இதே நாள் வரலாற்று நாயகனின் வரலாற்றுச் சாதனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு