சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக வளாகத்தில் திரௌபதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான படமாக திரௌபதி உருவாகியுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களே திரௌபதி படமாக உருவாகி உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். திரௌபதி என்ற திரைப்படம் நாடகக் காதலை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வகையில் இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் திரௌபதி திரைப்படத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக கொண்டும் இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசங்களை இந்த படம் காட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எல்லா மக்களும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கவேண்டும், இந்த படத்தில் எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கில் இது இல்லை என்றும் கூறினார். மேலும் சமூக விழிப்புணர்வு இந்த படத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டும் இந்த படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..