20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

100 நாட்களில் அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்தவை இவைதான்!- பட்டியலிடும் ஸ்ரீநேசன்

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த அரசாங்கம் 100 நாட்களில் தந்த வேதனைகள் என்ன என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொதுஜன பெரமுன பக்கம் தாவிச்சென்றவர், கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு 4 வருடங்களில் செய்யாததை தமது அரசாங்கம் 100 நாட்களில் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லித்திரிவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நெடியமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று (சனிக்கிழமை) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஸ்ரீநேசன் கூறுகையில், கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு 4 வருடங்களாகச் செய்யாததை தமது அரசாங்கம் 100 நாட்களில் செய்து சாதனை படைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொதுஜன பெரமுன கட்சியின் பக்கம் தாவிச்சென்ற ஒருவர் கூறுகின்றார்.

உண்மையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்த அரசாங்கம் 100 நாட்களில் தந்த வேதனைகள் என்ன என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை, தேசிய பொங்கல் நிகழ்வைக் கொண்டாட அனுமதிக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் தேவையெனில் மண்ணைத் தொண்டிப்பாருங்கள் என்றும் சொன்னார்கள்.

அதேபோல் அப்பாவித் தமிழ் மக்களைக் சித்திரவதை செய்து கொன்றொழித்த செயலுக்காக தீர்ப்பளிக்கப்பட்டு தண்டைனை பெற்றுவந்த இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றிய பல நேர்மையான அரச அதிகாரிகள் அரசியல் தலையீடுகளினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். நிர்வாகப் பதவிகளில் இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ளனர், நிர்வாகக் கடமைகளில் அநாவசிய இராணுவத் தலையீடுகள், தேசிய கல்வி ஆணைக்குழுவில் பெரும்பான்மை இனத்தவர்கள் மாத்திரம்தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் இருந்த விலகியுள்ளமை என தமிழ் இனத்திற்கு எதிராக பல செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வேதனைகளை எமக்குத் தந்துவிட்டு வெட்கம் இன்றி சாதனை படைத்துவிட்டதாகக் கூறித்திரிகின்றார்கள்.

அண்மையில், வடக்கு கிழக்கில் தாங்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. அப்படியாயின் இவர்கள் தென்பகுதிகளில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தமக்குத் தேவையில்லை என பிரசாரம் செய்யப்போகின்றார்கள்.

பெரும்பான்மையினரின் வாக்குகள்தான் தேவை என்பதால் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லை என்றும் ஆனால் மறைமுகமாக வடக்குக் கிழக்கில் உள்ள சில்லறைக் கட்சிகளைக் களமிறக்கி தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து ஆசனங்களைக் கைப்பற்றும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதற்காகவே அவசரமாக ஆனந்தசங்கரி ஐயாவின் சூரியன் சின்னம் மாத வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூரியன் சின்னத்தினைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் முன்பு வடக்கு தலைமைகளை நம்பமடியாது எனக்கூறி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினை உருவாக்கியவர்கள்.

தற்போது அதை மறந்து தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக ஆனந்த சங்கரி ஐயாவிடம் சரணாகதியாகியுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் யோக்கியத்தினை இழந்தவர்கள். தற்போது மீண்டும் மொட்டுச் சின்னத்திற்காக சூரியன் முகமூடியினை அணிந்து வரப்போகின்றார்கள்.

இதற்குப் பின்னர் வரும் தேர்தல்களில் என்ன சின்னத்தில் வரப்போகின்றார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது மக்கள் இவர்களை நன்றாகவே இனங்கண்டு வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.





100 நாட்களில் அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்தவை இவைதான்!- பட்டியலிடும் ஸ்ரீநேசன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு