சீனாவின் வுகான் நகரில் தோன்றி பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது
சீனாவில் இருந்து மெல்ல, மெல்ல மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது 67 நாடுகளை சுற்றி வளைத்துள்ளது.
கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 3053 ஆக அதிகரித்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 2870 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் 42 ஆயிரத்து 609 பேர் இந்த வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.
35 ஆயிரம் பேர் சாதாரண பாதிப்புடன் குணப்படுத்தி விடக்கூடிய நிலையில் உள்ளனர். ஆனால் 7 ஆயிரத்து 607 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மிக, மிக அதிகமாக இருப்பதால் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 42 ஆயிரத்து 728 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமண்ட் பிரின்சஸ் (ஜப்பான் கப்பல்), ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்சு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 41 பேர் இந்த வைரசால் பலியாகி உள்ளனர்.
இத்தாலியில் சுமார் 1200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இது அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் 85 இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது. இந்த 85 மாணவர்களும் இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பவியா நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் விடுதிகளிலும், வீடுகளிலும் முடங்கியுள்ளனர்.
இத்தாலியில் கடந்த ஒரு வாரமாக 85 இந்திய மாணவர்களும் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து இருப்பது அவர்களை மேலும் திணற வைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்தக்கட்டமாக 85 இந்திய மாணவர்களுக்கும் உணவு பொருட்கள் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும் என்று கூறப்படுகிறது.
இந்த 85 மாணவர்களில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 25 பேர் தெலுங்கானா, 20 பேர் கர்நாடகா, 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். டெல்லி, ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர்களும் அங்கு உள்ளனர்.
இத்தாலியில் உள்ள 85 மாணவர்களில் 65 மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பு படித்து வருகிறார்கள். பவியா பல்கலைக்கழகம் மொத்தம் 17 வளாகங்களைக் கொண்டது. இதில் என்ஜினீயரிங் படிப்பு வளாகம்தான் மிகப்பெரியது.
இந்த வளாகத்தில் இருந்தவர்களுக்குத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள் அனைவரையும் இத்தாலி அரசு தனிமைப்படுத்தி கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்துள்ளது. இது தமிழக மாணவர்களை மிகுந்த தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியதும் இந்திய மாணவர்கள் நாடு திரும்பும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இத்தாலிக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் 85 பேரும் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத நிலை உள்ளது.
அந்த 85 இந்திய மாணவர்களையும் சிறப்பு விமானம் அனுப்பி மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 85 மாணவர்களும் பயத்தில் உறைந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது. தங்களை மீட்குமாறு அவர்கள் மத்திய அரசுக்கு அவசர தகவல் அனுப்பியுள்ளனர்.
ரோமில் உள்ள இந்திய தூதரகத்தை 85 மாணவர்களும் நாடியுள்ளனர். சொந்தமாக நாடு திரும்ப விமானம் கிடைக்காததால் தவித்து வரும் அவர்கள் மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இத்தாலி அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
0 Comments
No Comments Here ..