சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான மாதவரத்தில் ரசாயனக் கிடங்கு ஒன்றில் சனிக்கிழமை மாலை பற்றிய தீயை 1000 வீரர்களுக்கும் மேல் விடிய, விடிய போராடி அணைத்துள்ளனர்.
120 கோடி ரூபாய்க்கும் மேலாக சேதம் எனக் கூறப்பட்டாலும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பரபரப்பான மாதவரம் ரவுண்டானா அருகில் ஆக்ரோஷமாக கொழுந்துவிட்டு எரிந்த தீ பொது மக்களிடையே பீதியை கிளப்பியது.
காற்று மாசு இல்லை என்பது பொய். எரிந்தது என்ன ரசாயனம், எந்த மாதிரியான மாசு என்பதை முறைப்படி அறிவிக்க வேண்டும். முதலில் என்ன ரசாயனம் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. காற்று மாசு உறுதியாக இருக்கும். அது எந்த அளவில் உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
சேஃப்டி டேட்டா ஷீட் என்பது 16 வகையான தகவல்களை உள்ளடக்கியிருக்கும். அதில் என்ன மாதிரியான ரசாயனங்கள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன, எந்த அளவில் உள்ளன, கிடங்கில் எந்தெந்தப் பகுதிகளில் அவை உள்ளன, இது போன்ற 16 வகையான தகவல்கள் அடங்கிய சேஃப்டி டேட்டா ஷீட்டை ரசாயன கிடங்கு உரிமையாளர் தயார் செய்து அருகிலுள்ள தீயணைப்பு நிலையம், உள்ளிட்ட மீட்புப் பணியில் ஈடுபடும் அனைத்து துறைகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும்.
என்ன ரசாயனம் அங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் மட்டுமே அதனால் உருவான தீயை எவ்வாறு அணைக்க முடியும் என்பதை முடிவு செய்ய முடியும். சில ரசாயனங்களால் ஏற்பட்ட தீயை நீரால் அணைக்க முடியும், சில ரசாயனங்களை நுரைகள் கொண்டு அணைக்க முடியும், சில ரசாயனங்களில் தண்ணீர் பட்டாலே தீ பிடிக்கும், இந்நிலையில் எந்த ரசாயனம் என்பது தெரியாதது தீயணைப்புத் துறையினருக்கு சவாலாக அமைந்தது.
போபால் யூனியன் கார்பைடு விபத்தில் 25,000 பேர் இறந்தனர். இப்போது வரை அங்கு என்ன கெமிக்கல் வெளியானது என்பது சொல்லப்படவே இல்லை. என்ன கெமிக்கல் என்பது தெரிந்திருந்தால் உடனடியாக அதற்கு எதிரான மாற்று மருந்து வழங்கி பலரைக் காப்பாற்றியிருக்க முடியும். வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாது.
மேலும் அருகில் செல்ல வழிகள் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் கூறியிருந்தனர். தீயணைப்பு வாகனம், வீரர்கள் செல்வதற்குக் கூட வழி இல்லாமல் எப்படி ரசாயன கிடங்கு கட்டப்பட்டது?
தீயணைப்பு வீரர்களுக்கு முகக் கவசம் கூட வழங்கப்படவில்லை. இது அபாயகரமான விஷயம். பல வீரர்கள் முகக் கவசம் இல்லாமல் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். பல இடங்களில் தற்போது ரோபோக்கள் இதுபோன்ற மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. அந்த தொழில்நுட்பம் நம்மிடம் இருந்திருந்தால், தீ பற்றாத இடங்களில் இருந்த ரசாயனங்களை தனிமைப்படுத்தியிருக்க முடியும்.
மணலி, மாதவரம் மிக அருகில் உள்ள பகுதிகள். ஒரு கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட ரசாயன தொழிற்சாலைகள் மணலியில் உள்ளன. மக்கள் அதிகமாக வசிக்கும் இடமாகவும் மணலி உள்ளது. இந்தப் பகுதிகளில் தொழிற்சாலைகள், ரசாயனங்களை தேக்கிவைக்கும் கிடங்குகள் ஆகியவை மிக அருகில் உள்ளன. எனவே இவற்றைத் தனித்தனியாக பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். ஒரு கார் தொழிற்சாலை இருக்கிறது என்றால், அதன் அருகில் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை இருந்தால் பிரச்சினை இல்லை. இதுவே ரசாயன தொழிற்சாலைக்கு அருகிலேயே அதன் கிடங்குகள் இருக்கும்பட்சத்தில் விபத்தின் போது ஏற்படும் சேதங்கள் அபிரிமிதமானவையாக இருக்கும்.
சென்னையின் காற்று மாசுக்கு எண்ணூர், வட சென்னைப் பகுதிகளில் உள்ள பெட்ரோ காம்ப்ளக்ஸ் மண்டலங்கள்தான் என தொடர்ந்து கூறிவருகிறோம். அதை அரசு கவனத்தில் எடுத்து மொத்த தொழிற்சாலைகளையும் ஒரே இடத்தில் குவிக்காமல் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு பரவலாக்க வேண்டும்.
0 Comments
No Comments Here ..