03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் குறித்து இலங்கை அராங்கத்தின் புதிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் இன்று முதல் இரண்டு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். 

இந்த தகவலை, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், வைத்தியர் சுதத் சமரவீரவை மேற்கோள் காட்டி, சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் வெலிக்கந்தையில் அமைந்துள்ள கந்தகாடு, சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஆகியவை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. 

இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று மாத்திரம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனை அடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இத்தாலியில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 366 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 492 பேர் நேற்று மாத்திரம் கண்டறியப்பட்டுள்ளதுடன், நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 375 ஆக உயர்வடைந்துள்ளது. 

இந்த நிலையில், இத்தாலியின் லோம்பார்டி மற்றும் 14 மாகாணங்களைச் சேர்ந்த 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தடை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இத்தாலி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், லோம்பார்டி பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் தற்போதைய நிலைமை குறித்து இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கை தூதரகத்திடம் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவு நேற்று வினவியிருந்தது. 

இதன்போது, இத்தாலி அரசு விதித்துள்ள பயணத்தடை மற்றும் அபாய எச்சரிக்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் பிரபாசினி பொன்னம்பெரும, எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார். 

இத்தாலி அரசாங்கத்தின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலங்கங்களை கடந்த மாத இறுதியில் இலங்கை வௌியுறவு அமைச்சு அறிவித்திருந்தது. 


இதன்படி, 

(0039)-06-884-0801 அல்லது (0039)-06-885-4560 எனும் பொது இலக்கங்களின் மூலம் 


அல்லது, 

இத்தாலியின் ரோமில் அமைந்துள்ள தூதரகத்தை, 

(0039)-34-99-351-745 அல்லது (0039)-340-35-81-603 எனும் இலக்கங்களின் மூலம், 


அல்லது 

இத்தாலியின் மிலானில் உள்ள துணைத் தூதரகத்தை, (0039)-249-536-55-30 அல்லது (0039)-245-395-621 ஆகிய பொது இலக்கங்களின் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சீனாவில் தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 10 பேர் பலியாகியிருந்ததுடன், காணாமல் போயுள்ள 23 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. 

இந்த சம்பவம் சீனாவின் தெற்கு மாகாணமான, ஃபூஜியானில் (Fujian) நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. 

சீனாவில் கொரோனா தாக்கம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூஹான் பிராந்தியத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 600 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 




கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் குறித்து இலங்கை அராங்கத்தின் புதிய அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு