முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து ஆராயும் செயற்பாட்டை நாளைய தினத்தில் (12) முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தம்மை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இரத்துச்செய்யுமாறு ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் இந்த ரீட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டீ.நவாஸ் சிரான் குணரத்ன மற்றும் யோசித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி தனது கட்சிக்காரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையின் ஊடாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பிணை முறிகள் விவகாரம் தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இரகசிய பொலிஸார் ´பீ´ அறிக்கை ஒன்றை மன்றில் தாக்கல் செய்ததாகவும் அப்போது தனது மனைவி மத்திய வங்கியின் சட்டப்பிரிவில் கடமையாற்றுவதால் குறித்த வழங்கை விசாரித்தால் நீதியை நிலைநாட்ட முடியாது எனவும் அதனால் குறித்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க தீர்மானித்திருந்தாக ஜனாதிபதி சட்டத்தரணி இன்று மன்றில் கூறினார்.
பிடியாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் ரவி கருணாநாயக்கவின் சட்டத்தரணிகள் அதற்கு எதிராக விடயங்களை முன்வைக்க முயற்சித்த வேளையில் அதனை நீதிபதி நிராகரித்தாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
ஆகவே தமது கட்சிகாரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை சட்டவிரோதமானது என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
0 Comments
No Comments Here ..