மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் இருந்து ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருக்கலாம் என சந்தேகத்தில் அவரை சோதிப்பதற்காக அம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (13) பகல் கொண்டு வந்தபோது அந்த நோயாளியை வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல விடாது தடுத்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது அந்த நோயாளியை வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல விடாது தடுத்த 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நபர் ஒருவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த நபருக்கு கோரோனா தொற்று நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பரிசோதிப்பதற்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கோரோனா தொற்று நோய் பிரிவுக்கு அம்புலனஸ் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பெண்கள் மற்றும் வைத்தியசாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து போதானா வைத்தியசாலைக்குள் குறித்த அம்புலனஸ் வண்டியை செல்லவிடாது வைத்தியசாலையின் எல்லா வெளி வாசல் கதவுகளையும் பூட்டி தடுத்தனர்.
இதனை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. பின் பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களை விரட்டியடித்து, பல சிரமத்திற்கு மத்தியில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த நோயாளியை வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன் அம்புலன்ஸ் வண்டியை கொண்டு செல்ல விடாது தடுத்த 9 பேரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை அந்த பகுதியில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..