03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

கொரோனாவை விட பாதுகாப்பு நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு

கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில் 3 கட்டங்களாக அமெரிக்காவை மீள திறக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நேற்றும் 2,000 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவிலும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. பிரித்தானியாவில் லொக் டவுன் மேலும் 3 வாரங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பூட்டுதல் குறைந்தது மூன்று வாரங்களாவது இருக்கும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக், உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகள் கடந்த 10 நாட்களில் இரண்டு மடங்கு பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா “புயலின் பார்வையில்” இருப்பதாக எச்சரித்துள்ளார்.

உலகளவில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,182,058 ஐத் தாண்டியுள்ளது என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 145,516 பேர் உயிரிழந்துள்ளனர். 547,155 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா

கடந்த 24 மணி நேரத்தில் 2,147 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 34,617 ஆக உயர்ந்தது. புதிதாக 29,567 பேர் தொற்றிற்குள்ளாக, மொத்தமாக 677,570 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அமெரிக்காவின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்மட்டத்திலேயே இருக்கும் நிலையில், அமெரிக்கா ஆபத்தான எல்லையை கடந்து விட்டதாக தெரிவிக்கும் ட்ரம்ப், அமெரிக்காவை மீள இயங்க வைக்க 3 கட்ட திட்டத்தை அறிவித்துள்ளார். மாநிலங்களை கட்டம்கட்டமாக திறக்கலாம் என்றும், இதன்படி சில மாநிலங்களின் கட்டுப்பாடுகளை இந்த மாத இறுதிக்குள் தளர்த்தலாம் என தெரிவித்துள்ளார். அதிக சோதனை, சமூக விலகல் திட்டங்கள் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பாதிப்பு குறைவான மாநிலங்கள் முதலில் திறக்கப்படலாமென்றார்.

இதேவேளை நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, மாநிலத்தின் பணிநிறுத்த உத்தரவை மே 15 வியாழக்கிழமை வரை நீட்டித்துள்ளார். நிலைமைகள் அதிகரித்து வருவதாகக் காட்டும் தரவுகளை மேற்கோள் காட்டி, “நாங்கள் எங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்ய வேண்டும்” என்றார்.

நேற்று நியூயோர்க்கில் 606 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களில் பதிவான குறைவான எண்ணிக்கை இதுவாகும்.

பிரித்தானியா

கடந்த 24 மணித்தியாலத்தில் 861 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 13,729 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 4,617 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 103,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் லொக் டவுன் மேலும் 3 வாரங்களாவது நீடிக்கும் என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்துவது, இதுவரை மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளையும் வீணாக்கி விடும் என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்

கடந்த 24 மணித்தியாலத்தில் 753 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 17,920 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 17,164 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 165,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு அதிகரித்திருந்தாலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நொயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

இத்தாலி

இத்தாலியில் 525 உயிரிழப்புக்கள் கடந்த 2 மணித்தியாலத்தில் பதிவாகியது. இதுவரை 22,170 உயிரிழப்புக்கள் பதிவாகின. 3,786 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 168,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

கடந்த 24 மணித்தியாலத்தில் 503 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 19,315 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 4,289 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 184,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம்

பெல்ஜியத்தில் 417 உயிரிழப்புக்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகியது. மொத்த உயிரிழப்பு 4,857 ஆக உயர்ந்தது. புதிதாக 1,236 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 34,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனி

கடந்த 24 மணித்தியாலத்தில் 248 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 4,052 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2,945 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 137,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடா

நேற்று 185 உயிரிழப்புக்கள் பதிவாகின. இதுவரை 1,195 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,727 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 30,106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளில்- நெதர்லாந்து 181, துருக்கி 125, சுவீடன் 130 என உயிரிழப்புக்கள் பதிவாகின.

கடந்த 24 மணித்தியாலத்தில் உலகெங்கும் 6,996 பேர் உயிரிழந்தனர்.

சுவிஸ் திறக்கப்படுகிறது

சுவிஸில் நடைமுறையிலள்ள கட்டுப்பாடுகள் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என்று சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

வழக்கம்போல அனைத்து வகையான செயற்பாட்டுக்கும் வைத்தியசாலைகள் அனுமதிக்கப்படும். தெரிவுசெய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.

முடி திருத்தகங்கள், மசாஜ் பார்லர்கள் மற்றும் ஒப்பனை நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.

அதை தொடர்ந்து மே 11ஆம் திகதி முதல் கட்டாய வகுப்புக்கள், கடைகள், சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

மூன்றாவது கட்டமாக, உயர்நிலை, தொழிற்கல்வி, பல்கலைகழங்கள் ஜூன் 8ஆம் திகதி திறக்கப்படும்.

பிரேஸில்

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா பதவி விலகிய சிறிது நேரத்திலேயே புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டள்ளார். புதிய சுகாதார அமைச்சராக புற்றுநோயியல் நிபுணர் நெல்சன் டீச்சைக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக விலகல் நடைமுறையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வேலையற்றவர்களிற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் முன்னாள் அமைச்சர் கருத்து தெரிவித்த பின்னர், ஜனாதிபதிக்கும் அவருக்குமிடையில் மோதல் முற்றியிருந்தது

பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 190 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 1947 ஆக உயர்ந்தது.

ஜோர்ஜியா

ஜோர்ஜியாவில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையின் கீழான கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 21 வரை நாட்டின் எந்த தனியார் வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தரவை மீறி செயற்பட்டால், கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் மே மாதம் 10ஆம் திகதி வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் 3 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவைவின் திபிலிசி மற்றும் மூன்று நகரங்களில் இருந்து வெளியேறவோ, உள்நுழையவோ ஏப்ரல் 15 முதல் 10 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

லெபனான்

கடந்த இரண்டு வாரங்களில், லெபனானின் பதிவான 663 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதமானவர்கள் பிஷாரே நகரைச் சேர்ந்தவர்கள்.

நகரவாசிகளில் சுமார் 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 10 முதல் இரண்டு வார பூட்டுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இராணுவத்தினர் வீதிகளில் ரோந்தில் ஈடுபடுகிறார்கள்.

எகிப்பு

திங்கட்கிழமை அனைத்து பொதுப்போக்குவரத்தையும் நிறுத்த எகிப்து முடிவு செய்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, நாடு முழுவதற்கும் அவசரகால நிலைமையை நீடித்துள்ளார்.

நாட்டின் ஏழு மாகாணங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா

நைஜீரியாவில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த புதன்கிழமை வரையான நிலவரப்படி 8 சம்பவங்களில் 18 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையால், கொரோனா மரணத்தை விட அதிக மரணங்கள் நிகழ்கின்றன என மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்துள்ளன.




கொரோனாவை விட பாதுகாப்பு நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு