நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணி முதல் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அதி அபாய வலயங்களாக இனங்காணப்பட்ட 4 மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களுக்குமான ஊரடங்கு உத்தரவு கடந்த 27 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 08 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை வரை இந்த நடைமுறை தொடரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நேற்றைய அறிவிப்பின் படி இன்று இரவு 08 மணி முதல் எதிர்வரும் மே 04 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை இந்த ஊடரங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அதி அபாய வலங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு கடந்த மார்ச் 24ஆம் திகதி முதல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே 04ஆம் திகதி அதிகாலை வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இடர்வலயங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்பது குறித்த எந்தவித அறிவித்தலும் இன்னமும் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் வழங்கப்படவில்லை.
ஒரு மாத காலத்திற்கும் மேலான முடக்கத்தில் சிக்கித் தவிக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றனர்.
ஆனாலும், அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளுக்கு ஊடரங்கை உடனடியாக தளர்த்துவது ஊசிதமல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பரிந்துரைத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..