01,May 2024 (Wed)
  
CH
விளையாட்டு

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது

கிரிக்கெட் களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் கண்ணாடி, துண்டு, தொப்பி, கூடுதல் மேலாடை ஆகியவற்றை நடுவரிடம் (வழக்கமாக பந்து வீசும் போது கொடுப்பது உண்டு) வழங்கக்கூடாது. சக வீரர்களிடமும் இவற்றை கொடுக்கக்கூடாது.

*நடுவர்கள் பந்தை பந்துவீச்சாளர்களிடம் கொடுக்க வேண்டிய பணி இருப்பதால் கையுறை அணிந்து கொள்ளலாம்.

*வீரர்கள் பயிற்சியின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி (அல்லது இந்த விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறையை பின்பற்றலாம்) இருக்க வேண்டும். களத்திற்கு வெளியேயும் இதே நிலையை தொடர வேண்டும்.

*வீரர்கள் உடலோடு உரசி மகிழ்ச்சியை கொண்டாடுவதையும், தண்ணீர் போத்தல், குளிர்பானம், துண்டு மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

*எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால் பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பந்தை தொட்ட பிறகு அடிக்கடி கைகளில் கிருமி நாசினி திரவத்தை (சானிடைசர்) தடவிக் கொள்ள வேண்டும். பந்தை கையாண்ட பிறகு மூக்கு, கண், வாய் ஆகிய உறுப்புகளை தொடக்கூடாது.

அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களை பிற்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் அணியினருடன் பிரத்யேக மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும்.

*பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு தொடருக்கு முன்பாக வீரர்கள் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

* 10 வார கால ஊரடங்குக்கு பிறகு பந்து வீச்சாளர்கள் மீண்டும் பயிற்சியில் இறங்கும் போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இனி அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கும் என்பதால் பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை ஒவ்வொரு அணி நிர்வாகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை படிப்படியாக பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றால் 8 முதல் 12 வாரங்களும், ஒரு நாள் போட்டி என்றால் 6 வாரங்களும், 20 ஓவர் போட்டி என்றால் 5 முதல் 6 வாரங்களும் பயிற்சியில் ஈடுபட்டு தயார்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதில் கடைசி 3-4 வாரங்களில் பயிற்சியை தீவிரப்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடங்குவது எப்போது?

‘கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உணரும்போது மட்டுமே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றாக இணைந்து ஆடும் போது அதன் மூலம் உள்ளூரில் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது. பாதுகாப்பு தான் முதலில் முக்கியம். அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.’ என தெரிவித்துள்ளது.




சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு