29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வீட்டிலிருந்தே நோன்பு பெருநாளை கொண்டாடும் மக்கள்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை நோன்பு பெருநாளை முஸ்லிம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா ஆகும்.

ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் வழமையாக பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகைகள் நடைபெறும்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஊடரங்கு சட்டம் இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில, மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடினர்.

அதற்கமைய மலையகம், அம்பாறை போன்ற பல்வேறு பகுதிகளிலும் நோன்பு பெருநாளை மக்கள் அமைதியாக கொண்டாடி வருகின்றனர்.

மலையகத்தில் ஹட்டன், பொகவந்தலாவ போன்ற பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயே மக்கள் அமைதியான முறையில் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தவரையில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில், தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லிம் மக்களும் பண்டிகை தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.

அத்தோடு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக மிகவும் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




வீட்டிலிருந்தே நோன்பு பெருநாளை கொண்டாடும் மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு