ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடத்துவதற்கு பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட நிகழ்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டியதையடுத்து, எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் நடத்துவதற்கு வணிக அமைச்சர் அலோக் சர்மா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை காலநிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு, நிகழ்வு கூட்டாளர்களான இத்தாலி மற்றும் ஐ.நா.வுடன் ஒப்புக் கொள்ளப்பட்டது’ என பதிவிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் (Glasgow) உள்ள ‘ஸ்கொட்லாந்து கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில்’ இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த காலநிலை உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காலநிலை உச்சிமாநாடு எதிர்வரும் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. இதன்படியே தற்போது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி காலநிலை உச்சி மாநாட்டினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
காலநிலை மாற்றத்தை கையாள்வதில் முன்னேற்றத்தை மதிப்பிடும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாடு, கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்றது.
0 Comments
No Comments Here ..