கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே இப்போது அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் ஜே. ஜே. ஃப்ரெட்ரிக்கிற்கு இது முதல் படம்.
ஊட்டியில் 2004ல் குழந்தை கடத்திவந்த ஜோதி என்ற பெண், இரண்டு இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறாள். பிறகு அவளைக் காவல்துறை என்கவுன்டர் செய்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஊரில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருகிறார்.
அந்த வழக்கில் ஜோதியின் சார்பில் ஆஜராகிறாள் பெத்துராஜின் மகள் வெண்பா (ஜோதிகா). விசாரணை நடக்க நடக்க, ஜோதியின் உண்மையான கதை மெல்ல மெல்ல வெளியாகிறது.
ஒரு நீதிமன்ற த்ரில்லராக உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். பிறகு, இதையே ஒரு உருக்கமான கதையாகவும் சொல்ல விரும்பியிருக்கிறார். இதனால், நீதிமன்ற பகுதியும் ஏனோதானோவென அமைந்துவிட்டது; உருக்கமான பகுதியும் நெஞ்சைத் தொடவில்லை. கடைசியில் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லி படத்தை முடிக்கிறார்.
2004ல் முடிந்த ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரவைக்க ஒரு வலுவான ஆதாரம் தேவை. அப்படி எந்த ஆதாரமும் இல்லாமல், அப்போதுதான் துவங்கி நடக்கும் ஒரு வழக்கைப் போல நீதிமன்ற நடவடிக்கைகள் அமைகின்றன. அதற்குப் பிறகும் புத்திசாலித்தனமான விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் என சுவாரஸ்யமாக நகராமல், ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே நகர்கிறது படம்.
பல இடங்களில் நீதிமன்றத்தில் இருந்தபடி வழக்கறிஞர் வெண்பா ஒரு நீண்ட கதையைச் சொல்கிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரே சோர்ந்துபோய் நின்றுவிடுமளவுக்கு அந்தக் காட்சி அமைந்துவிடுகிறது.
நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குதான் படத்தின் முதுகெலும்பு எனும் நிலையில், அந்த காட்சிகள் சொதப்பிவிட்டதால் மீதமுள்ள கதை ஏதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்தக் கதையில் நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் அடிப்படையில் நேர்மையான நபர். ஆனால், தன் மகளின் திருமணத்திற்கு ஊர்ப் பெரிய மனிதரான வில்லனை வரவழைக்க வேண்டுமென்பதற்காக, லஞ்சம் வாங்குபவராக மாறிவிடுகிறாராம். அதுவும் அடுத்த நாள் அந்த வில்லன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலையில் இந்த முடிவை எடுக்கிறாராம் நீதிபதி. பிறகு நண்பர் வந்து திட்டவும் திருந்திவிடுகிறார். எதற்கு இந்தக் காட்சி? இதனால் கதையில் என்ன மாறிவிட்டது?
ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகிய மூவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் தியாகராஜன் ரோபோ மாதிரி வந்துபோகிறார்.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் வெளிப்புறக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசை ஓகே ரகம்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு த்ரில்லர் மூலம் சொல்ல விரும்பியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அழுத்தமான திரைக்கதை இல்லாததால் பெரிய தாக்கம் எதையும் படம் ஏற்படுத்தவில்லை.
0 Comments
No Comments Here ..