பிரித்தானியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கான சுய தனிமைப்படுத்தப்படும் விதியை தளர்த்துவதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்படும் விதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சில அமைச்சர்கள் மற்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது பயணத் துறையை சேதப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த பின்னணியிலேயே இதுகுறித்து மீள்பரீசிலனை செய்யப்படவுள்ளது.
குறைந்த தொற்று வீதங்களைக் கொண்ட நாடுகளுக்கான பயண தளர்வுகள் அல்லது 14 நாள் விதியிலிருந்து விலக்கு பெற்ற தொழிலாளர்களின் பட்டியலை விரிவாக்குவது இதில் அடங்கும்.
எந்தவொரு மாற்றமும் அறிவியலால் வழிநடத்தப்படும். ஆனால் விதியை தளர்த்துவதற்கான திகதி ஜூலை 20ஆக இருக்கலாம். இது பாடசாலை விடுமுறைக்கு ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகள் எதிர்வரும் மாதம் ஜூன் 8ஆம் திகதி முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை அமையும் என அரசாங்கம் கருதுகின்றது.
சர்வதேச பயணிகள், சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளும் இடத்தை அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நடைமுறையில் இருந்து, லொரி ஓட்டுநர்கள், பருவகால பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அயர்லாந்து குடியரசு, சேனல் தீவுகள் மற்றும் மாண் தீவு ஆகியவற்றிலிருந்து பயணிப்பவர்களுக்கும் இந்த தேவை பொருந்தாது.
0 Comments
No Comments Here ..