இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லியை நோக்கி செல்வோம்) என்ற போராட்டத்தை கடந்த 26ஆம் தேதி தொடங்கியுள்ளனர்
விவசாயிகளின் இந்த போராட்டத்தை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, கண்ணீர் புகைக்குண்டு, லத்தியால் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வரும்போதும், விவசாயிகளின் விடாப்பிடியால் அவர்களது போராட்டம் 6ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில், காணொளிக் காட்சி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “விவசாயிகள் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” எனக்கூறியுள்ளார்
உலகளாவிய ஒற்றுமையை அப்போது வலியுறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ, ஒருவருக்கொருவர் உதவுவதற்கான தனது தொடர்ச்சியான ஆர்வத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக முதன்முதலாக கருத்து தெரிவித்த உலக தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது கவனிக்கத்தக்கது
கனடா பிரதமரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதி, “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் பிற நாட்டு அரசியலுக்கான தீவன் அல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும், மற்ற நாடுகளும் கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், இந்தியாவில் விவசாயிகள் தொடர்பான "கனடிய தலைவர்களின் சில தவறான தகவல்களை" குறிப்பிட்டு, அவர்கள் "தேவையற்றவர்கள்" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், கனடா அமைச்சர்களும், சீக்கியர்களுமான நவ்தீப் பெய்ன்ஸ் மற்றும் ஹர்ஜித் சஜ்ஜன் ஆகியோரையும் அனுராக் ஸ்ரீவஸ்தவா சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களான கனடா அமைச்சர்கள் 18 பேருடனான கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான தனது கருத்தை ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த கருத்து கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் ஆதரவை பெரும் நோக்கத்துடன் வெளி வந்துள்ளதாகவும், ஜிக்மீத் சிங் தலிவால் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியால் சீக்கியர்கள் மீதான ஜஸ்டின் ட்ரூடோவின் பிடிப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
0 Comments
No Comments Here ..