02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

நடிகை மரணம் – விசாரணைக்கு உத்தரவு – புதிய தகவல்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா (28) சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2013 ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா.

அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2018 ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சித்ராவின் சடலம் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் உடலை மீட்ட போலீஸார் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை பற்றிய விளம்பரம் ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா.

சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வரும் சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்த ஜோடிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரில் நடிப்பதற்காக சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இவிபி ஃபிலிம் சிட்டிக்கு சென்று வர திருவான்மியூர் வீட்டில் இருந்து செல்வதில் சிரமம் இருந்ததால், படப்பிடிப்பு பகுதிக்கு அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் அவர் தங்கினார். அவருடன் ஹேமநாத்தும் தங்கினார்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குளிக்க வேண்டும் என்பதால் ஹேமநாத்தை வெளியே இருக்குமாறு சித்ரா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெகுநேரமாகியும் அறை கதவை சித்ரா திறக்காததால் விடுதி ஊழியர் உதவியுடன் அறையின் மாற்று சாவியை பயன்படுத்தி கதவைத் திறந்ததாகவும் அப்போது, சித்ரா தூக்கிட்ட நிலையில் இருந்ததாக ஹேமநாத் தெரிவித்ததாக காவல்துறையிடம் விடுதி நிர்வாகம் தகவல் கொடுத்தது.

இதையடுத்து காவல்துறையினர் வந்து உடலைக் கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சித்ராவுடன் தனக்கு ஏற்கெனவே பதிவுத்திருமணமாகி விட்டதாக காவல்துறையினரிடம் ஹேமநாத் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஒரு பெண் திருமணமான நாளில் இருந்து ஏழாண்டுகளுக்குள் உயிரிழந்ததால் அது தொடர்பான விசாரணையை ஆர்டிஓ நடத்த வேண்டும் என்ற சட்ட விதிகளுக்கு ஏற்ப அவரது மரணம் குறித்து ஆர்டிஓ விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதேவேளை, சித்ராவின் கன்னம், தாடை ஆகிய பகுதிகளில் ரத்தக்கறை இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது தந்தை நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ நாளுக்கு முன்தினம் நள்ளிரவு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சித்ரா மிகவும் ஆக்டிவ் ஆக இருந்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அவர் இயல்பாக சாட்டிங் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவரது நண்பர்களில் ஒருவரான சரண்யா, செட்டில் சித்ராவுடன் எடுத்த படங்களை பகிர்ந்து வந்தார். அதில் “எப்போதும் செல்பேசியில் பிஸி ஆக இருப்பவர் சித்ரா” என்று கூறி ஒரு காணொளியையும் அவர் பகிர்ந்திருந்தார். அதற்கு சித்ரா “லவ் எமோஜி” எனப்படும் ஸ்மைலியை போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எனவே, இயல்பாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அதற்கு தூண்டப்பட்டாரா அல்லது தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

அவரது செல்பேசி பறிமுதல் செய்யப்பட்டு அவர் கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தார், அவருக்கு வந்த குறுந்தகவல்கள் யாரிடமிருந்து வந்தன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

அவரது மரணம் தொடர்பாக முதல் தகவல் அளித்த விடுதி நிர்வாகிகள், அவரது அறைக்கு மாற்று சாவியை வழங்கியதாக கூறப்படும் ஊழியர், சித்ராவின் அறையில் தங்கியதாக கூறப்படும் ஹேமநாத் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். அதன் பிறகே, இந்த வழக்கில் உள்ள மர்மம் விலகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.




நடிகை மரணம் – விசாரணைக்கு உத்தரவு – புதிய தகவல்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு