19,Apr 2024 (Fri)
  
CH
பொழுதுபோக்கு

நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மணி. இவரின் மகன் பெயர் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் எலெட்ஜின் கணவர் பெயர் எலியட் டக்ஹர்டி. (மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஆண்கள்).

தன் மகன் மற்றும் அவரது கணவரின் அழகிய பெண் குழந்தையான உமா லூயிஸைப் பெற்றெடுக்க, சிசில் வாடகைத் தாயாக இருந்தார்.

மேத்திவ் எலெட்ஜும், எலியட் டக்ஹர்டியும் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த வேண்டும் எனக் கூறிய போது, தான் வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருப்பதாக யோசனை கூறி இருக்கிறார் சிசில். அப்போது அனைவரும் சிரித்தார்கள் என்கிறார் சிசில் எலெட்ஜ்.

சிசில் எலெட்ஜ் யோசனை கூறிய போதே, அவருக்கு வயது 59. முதலில் சிசிலின் யோசனையை விளையாட்டாகவும், அது எதார்த்தத்தில் நடக்காத விஷயமாகவுமே பார்த்தார்கள்.

சிசிலின் யோசனை, அவர் தரப்பில் இருந்து வந்த அழகான உணர்வாகத் தெரிந்தது என்கிறார் மேத்திவ் எலெட்ஜின் கணவர் எலியட் டக்ஹர்டி.

மேத்திவ் எலெட்ஜும், எலியட் டக்ஹர்டியும் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்யலாம் என தேடிக் கொண்டிருந்த போது, சிசில் எலெட்ஜின் யோசனையைச் செயல்படுத்த சாத்தியமிருக்கிறது என ஒரு மருத்துவர் கூறியிருக்கிறார்.

அதன் பின், சிசில் எலெட்ஜ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பல்வேறு சோதனைகளும், நேர்காணல்களும் நடத்தப்பட்டது. எல்லா பரிசோதனை முடிவுகளும், சிசில் எலெட்ஜ் வாடகைத் தாயாக இருப்பதற்கு பச்சைக் கொடி காட்டியது.

நான் எப்போதும் உடல் நலத்தில் கவனத்தோடு இருப்பேன். நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என சந்தேகிக்க எந்த ஒரு காரணமும் இல்லை என்கிறார் சிசில் எலெட்ஜ்.

சிசில் எலெட்ஜின் மகன் மேத்திவ் எலெட்ஜ் விந்தணுவையும், டக்ஹர்டியின் சகோதரி லியா கரு முட்டையையும் வழங்கினார்கள்.

ஆண் பெண் தம்பதியினர், குழந்தையைப் பெற்றுக் கொள்ள கடைசியாகச் செய்து பார்க்கும் விஷயம் தான் ஐ.வி.எஃப் முறை. ஆனால் எங்களைப் போன்ற ஒரே பாலின தம்பதிகளுக்கு ஐவிஎஃப் மட்டுமே ஒரே நம்பிக்கை என்கிறார் சிகை அலங்காரம் செய்பவராக இருக்கும் எலியட் டக்ஹர்டி.

இப்படிப்பட்ட விஷயங்களில், நாம் தனித்துவமாக இருக்க வேண்டும், வழக்கத்துக்கு மாறாக புதிதாக சிந்திக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்கிறார், பள்ளி ஆசிரியையான சிசில் எலெட்ஜ்.

என் கர்ப காலம் மிகவும் சீராக இருந்தது. பேறு காலத்தில் வழக்கமாக வரும் சமிக்ஞைகள், இதற்கு முன்பு மூன்று குழந்தைப் பேறுகளின் போது இருந்ததை விட, இந்த முறை கொஞ்சம் கூடுதலாக இருந்தது என்கிறார் சிசில் எலெட்ஜ்

சிசில் எலெட்ஜின் வயிற்றில் கருமுட்டையைச் செலுத்தி ஒரு வாரத்துக்குள், சிசில் எலெட்ஜின் வயதுக்கு பொதுவாக வரும் சில சமிக்ஞைகள் வந்தன. கருமுட்டை செலுத்தியது வெற்றிகரமாக நடந்திருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள, மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி, கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை பரிசோதிக்கும் Pregnancy Test-ஐக் கொண்டு வந்தார்கள்.

கர்ப்பமாக இருக்கிறீர்களா என பரிசோதிக்க வேண்டாம் எனக் கூறி இருந்தார்கள். ஆனால் மகன் மற்றும் மருமகனால் காத்திருக்க முடியவில்லை என சிரித்துக் கொண்டே கூறுகிறார் சிசில் எலெட்ஜ்.

அந்த சோதனைக் கருவியைப் பார்த்து சிசில் எலெட்ஜ் உடைந்து போனார். அதன் பிறகு, சிசில் எலெட்ஜைத் தேற்ற வந்த அவரது மகன் மேத்திவ் எலெட்ஜ், சிசில் கவனிக்கத் தவறியதை கவனித்தார். இரண்டாவது பிங்க் நிற கோடு இருந்தது. சிசில் எலெட்ஜ் கர்பமாக இருப்பதை அது உறுதி செய்கிறது.

சிசில் எலெட்ஜால் சரியாகப் பார்க்கத் தான் முடியாது, ஆனால் அவரால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி வேடிக்கையாகப் பேசியதை மீண்டும் நினைவுப்படுத்திக் கூறுகிறார்.

தான் கர்பமாக இருக்கும் செய்தியை பெரும்பாலானவர்கள் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக, மேத்திவ் எலெட்ஜின் உடன் பிறந்தவர்கள், அதிர்ச்சி உடன் நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள் என்கிறார் சிசில் எலெட்ஜ்.

எல்லோருக்கும், எல்லா விவரங்களும் முழுமையாகத் தெரிய வந்த போது, பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது என்கிறார் சிசில்.

சிசில் எலெட்ஜ் கர்ப்பமாக இருக்கும் விஷயம், நெப்ராஸ்கா மாகாணத்தில் எல்ஜிபிடி சமூகத்தினருக்கு எதிரான பாகுபாடுகளை வெளிக் கொண்டு வந்தது.

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்குப் பிறகு, நெப்ராஸ்கா மாகாணத்தில், ஆண்கள் தன் பாலினத் திருமணம் சட்டப் படி சரி.

நெப்ராஸ்கா மாகாணத்தில், பாலின விருப்பம் (Sexual Orientation) தொடர்பான பாகுபாடுகளை தடை செய்யும் விதத்தில் எந்த சட்டமும் இல்லை.

2017-ம் ஆண்டு வரை, நெப்ராஸ்கா மாகாணம் பல தசாப்தங்கள் பழமையான, கே & லெஸ்பியன் வளர்ப்புப் பெற்றோர்கள் தடைச் சட்டத்தை (Ban on gay and lesbian foster parents.) வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிசில் எலெட்ஜ், தன் பிரசவ செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடினார். ஆனால் வேலைக்கு ஆகவில்லை. என் சொந்தக் குழந்தையைப் பெற்று எடுக்கிறேன் என்றால், காப்பீட்டு நிறுவனங்கள் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கும் என்கிறார் சிசில் எலெட்ஜ்.

அமெரிக்காவில், குழந்தையைப் பெற்றெடுப்பவர் தாயாக கருதப்பட வேண்டும் என இருக்கும் சில சட்டங்களால் உமா லூயிஸின் பிறப்புச் சான்றிதழில், குழந்தையைப் பெற்றெடுத்தவராக சிசில் எலெட்ஜின் பெயரும், மேத்திவ் எலெட்ஜின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எலியட் டக்ஹர்டியின் பெயர் இடம் பெறவில்லை.

எங்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு இது ஒரு சிறிய உதாரணம் என்கிறார் மேத்திவ் எலெட்ஜ்.

மேத்திவ் எலெட்ஜும், எலியட் டக்ஹர்டியும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக, மேத்திவ் வேலை பார்த்த ஸ்கட் கத்தோலிக் ஹை ஸ்கூலிடம் தெரிவித்தார். ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொள்வதால், பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், பல அமெரிக்க பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார் மேத்திவ் எலெட்ஜ்.

மேத்திவ் எலெட்ஜ் நடத்தப்பட்ட விதம் பரவலாக அதிருப்தியைக் கிளப்பியது. அந்தப் பள்ளியில் படிக்கும் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் இணைந்து, மேத்திவ் எலெட்ஜ்-க்கு நடந்த வேலை வாய்ப்பு பாகுபாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், இனி வருங்காலத்திலும் யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது என ஒரு இணைய வழி மனுவை உருவாக்கினார்கள்.

இந்த மனு தற்போது மூடப்பட்டுவிட்டது. 1,02,995 பேர் இந்த மனுவை ஆதரித்தார்கள்.

என் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை, தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க கற்றுக் கொள்கிறேன். கடைசியில் எங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். எங்களை ஆதரிக்கும் மிகப் பெரிய சமூகம் இருக்கிறது என்கிறார் மேத்திவ் எலெட்ஜ்.

உமா லூயிஸ் பிறந்து ஒரு வார காலம் கழித்து, தானும், பேத்தி உமா லூயிஸும் நலமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் உமா லூயிஸ் அன்பான குடும்பத்தில் வளரப் போகிறாள் என்கிறார் அந்த 61 வயது அன்புப் பாட்டி சிசில் எலெட்ஜ்.





நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு