28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

கூகுள், யூட்யூப் சேவைகள் திடீர் முடக்கம்

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கியுள்ளன. 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.

கூகுள் இணைய சேவை சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முடக்கங்கள் திங்கட்கிழமை மாலையில் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த திடீர் முடக்கம் காரணமாக, கூகுள் நிறுவனத்தின் எந்தவொரு சேவையையும் பயனர்களால் அணுக முடியவில்லை.

பல தனியார் அலுவலகங்கள், தனி நபர்கள் தங்களின் பிற பரிவர்த்தனை தொடர்புகளுக்கு கூகுள் நிறுவன மின்னஞ்சல், கூகுள் டிரைவ் போன்றவற்றை நம்பியிருக்கின்றன. இதனால், சேவை முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது உலக அளவில் பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அல்லது கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வதையும், வீட்டில் இருந்து பாடங்களை படிப்பதையும் அரசாங்கள் ஊக்குவித்து வருகின்றன.

பல நாடுகளில் பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களின் கல்வியைத் தொடர கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கிளாஸ்ரூம் சேவையை நம்பியிருக்கின்றன. அதன் மூலமாகவே அன்றாட வகுப்புகள், வீட்டுப்பாட குறிப்புகள் மாணவர்களுடன் பகிரப்படுகிறது. இந்த வசதிக்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், கூகுள் சேவை முழுமையாக முடங்கியிருப்பதால், மாணவ சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அரிதாக இப்படி நடப்பதால், கூகுள் நிறுவன சேவைக்கு என்ன ஆனது என்பதை அறிய பலரும் இணைய பக்கங்களில் விவரங்களை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், யூட்யூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களில் பலரும் யூட்யூப் சேவையை அணுக முடியாமல் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய குழு அது குறித்து கவனித்து வருகிறது. விரைவில் என்ன நடந்தது என்ற தகவலை தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளது.




கூகுள், யூட்யூப் சேவைகள் திடீர் முடக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு