மதுபோதையில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்; கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்
மதுபான விருந்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு எம்.பி இரா.சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் மதுபோதையில் குழப்பம் செய்ததாக அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சாணக்கியன் குழுவினரை அகற்றுமாறு பொலிஸாரிடம் கேட்டுக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குசலானமலை பகுதி பௌத்தர்களின் தொல்லியல் சின்னம் என, அண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைக்கல் இடப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய இடமாக அது மாறியது.
அங்குள்ள சைவ ஆலய நிர்வாகம், ஆலய மக்கள் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தலையீட்டில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று அந்த பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அவர் அந்த பகுதிக்கு வருவதை அறிந்த சுமணரத்தின தேரர், பன்குடாவெளி பகுதியில் அமைச்சரை மறித்து தகராற்றில் ஈடுபட்டார். சிங்கள மக்களிற்கு பிரச்சனை இருக்கும் போது, தமிழ் மக்களின் சார்பில் பௌத்த சின்னங்களை அகற்ற முயற்சிக்கிறீர்களா என தகராற்றில் ஈடுபட்டார்.
பன்குடாவெளியில் பௌத்த சின்னங்கள் அழிவடைகிறது, அவற்றையும் பார்வையிட வேண்டுமென வற்புறுத்தினார். இதையடுத்து, அங்கும் சென்று பார்வையிட்ட பின்னர், குசலானமலைக்கு சென்றார்.
குசலானமலை பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க, குசலானமலை முருகன் ஆலயத்தின் நிருவாகத்தினருடன் சுமூகமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளிற்கு அமைய ஆலய கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு எந்த வித தடைகளே, இடையூறுகளே தமது அமைச்சினால் மேற்கொள்ளப்படமாட்டாது என வாக்குறுதியளித்ததனைத் தொடர்ந்து அங்கிருந்து சென்றிருந்தார்.
இதேவேளை, நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வெற்றிக்கொண்டாட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கல்லடி பாலத்திற்கு அண்மையிலுள்ள சன்சைன் உணவு விடுதியில் மது, உணவு விருந்து நடைபெற்றது. இதில் சாணக்கியன் எம்.பி, மட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் உற்சாக பானங்களை அருந்திக் கொண்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் வந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனயாக, விருந்தை முடித்துக் கொண்டு அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
குசலான மலையில் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்தபோது, இடைநடுவில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உள்ளிட்ட குழுவினர் வீதியின் குறுக்கே அமர்ந்திருந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனத்தில் இருந்து இறங்கி வந்த இராஜாங்க அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது மட்டுமல்லாமல் “இராஜாங்க அமைச்சரே எனக்கு சொல்லாமல் ஏன் மட்டக்களப்பிற்கு வந்தீர்கள், வேறு ஒருவர் சொல்லி நீங்கள் வருவதை நான் அறிந்துகொண்டேன்” என உரத்த தொனியில் அமைச்சரை கடிந்துகொண்டார். “நான் வரும்போது உங்களிடம் சொல்வதாக சொல்லியிருந்தது உண்மைதான். ஆனால் பொலன்னறுவை உள்ளிட்ட பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் சொல்ல முடியவில்லை“ என இராஜாங்க அமைச்சர் கூறினார்.
எனினும், கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்லைக்கற்களை உடனடியாக பிடுங்க வேண்டும் என்றும், அல்லது அமைச்சரை செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றும் குறிப்பிட்டனர்.
கூட்டமைப்பினரை பார்த்து இரண்டு கைகளாலும் கும்பிட்ட இராஜாங்க அமைச்சர் “நீங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடருங்கள் உங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது“ என்று சொல்லிவிட்டு தனது வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டு விட்டு, அங்கிருந்து நடந்து சென்றிருந்தார்.
கூட்டமைப்பினரை கடந்து வாகனங்களையும் எடுத்து சென்றனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சில் ஈடுபட முயற்சித்தார். எனினும், கூட்டமைப்பினர் அடங்கவில்லை. இதன்போது, சாணக்கியன் உள்ளிட்ட போராட்டக்காரர்களிடம் இருந்து மதுபான வாடை அடிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். அதை உறுதிசெய்வதை போல கூட்டமைப்பினர் நிதானமிழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து மதுவாடை அடித்ததை தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் அங்கிருந்து விலகி சென்றிருந்தார்.
பின்னர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வந்தபோது, அவர்களையும் மறித்து ரகளை செய்தனர். தனக்கு தெரியாமல் எப்படி அமைச்சரை கூட்டிவர முடியுமென அவர்களுடன் சாணக்கியன் ரகளை செய்தார். எனினும், ஒவ்வொரு பிரதேச எம்.பிக்கும் அறிவித்து தாம் கடமை செய்வதில்லையென அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி, சாணக்கியன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமது பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் போடப்பட்ட தடையை அகற்றவது தொடர்பாக சுமுகமான கலந்துரையாடல் முடிந்துள்ள போது, எதற்கு குழப்புகிறீர்கள் என கேள்வியெழுப்பினர். மதுபோதையில் இருப்பதால் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கு வந்த கரடியனாறு காவல்துறை பொறுப்பதிகாரியிடம் முறையிட்டனர்.
பொதுமக்களும், வியாழேந்திரனின் ஆதரவாளர்களும் சாணக்கியன் குழுவினரிடமிருந்து மதுபான வாடை அடிக்கிறது, சாராயம் குடித்திருக்கிறீர்களா என அடுக்கடுக்காக கேள்வியெழுப்ப தொடங்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து கலைந்து செல்ல முயற்சித்தனர்.
பின்னர் காவல்துறை ஏனையவர்களையும் அகற்றினர்.
போாட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் எம்.பி சிறிநேசன் உள்ளிட்ட ஒரு சிலர் மாத்திரம் மதுபோதையில் இருக்கவில்லையென தெரிகிறது.













0 Comments
No Comments Here ..