கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வழக்கத்தை விட சற்று காலதாமதமாக கடந்த ஒக்டோபர் 4-ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்போஸ் 4-வது பருவம் ஒளிப்பரப்பாகத் தொடங்கியது. ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, விஜயலட்சுமி, கவின், லாஸ்லியா, வனிதா விஜயகுமார், சான்டி என கடந்த 3 பருவங்களில் நினைவுகூறப்படும் இவர்கள் யாருமே வெற்றியாளர்கள் இல்லை. ஆனால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்களின் தனித்துவத்தின் காரணமாக பிக்போஸ் ரசிகர்களால் மறக்கப்படாதவர்கள்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் 4-ஆவது பருவம் ஏறக்குறைய முடிவை நெருங்கி விட்டது. ஆனாலும் ஒரு தனித்துவமான, சுவாரசியமான போட்டியாளரை பிக்பாஸாலும் பார்வையாளர்களாலும் இதுவரை காணமுடியவில்லை. பிறகு எப்படி இவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதற்கு பதில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல் கூறும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே நமக்கு விடையாக மிஞ்சுகிறது.
அறிமுகமே இல்லாத 16 நபர்களுடன் போட்டியாளர்கள் தங்களது சுயத்தை இழக்காமல் 100 நாள்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும் – இதுதான் பிக்பாஸ் போட்டியின் மையக்கரு. ஆனால் கரோனா நோய்த் தொற்று காரணமாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் வராத காரணத்தாலோ என்னவோ, தங்களுக்கு தோதான 16 பேரை வலிய திணித்து நிகழ்ச்சியைத் தொடங்கியது போல உள்ளது. இதனால் போட்டி இப்போது சூடுபிடிக்கும், நாளை அதிரடியாக இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பார்வையாளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.
இதனால் ஹிந்தியில் 14-ஆவது சீசனை எட்டிய இந்த நிகழ்ச்சி தமிழில் 4-ஆவது சீசனிலேயே அலுத்துவிட்டது. இதற்கு தேர்ந்தெடுத்த போட்டியாளர்களே காரணமாகி விட்டனர். இந்த முறை கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கென்று ஏற்கெனவே தனியாக ஒரு யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள். இவர்களது பக்கங்களை ஏற்கனவே பின்தொடர்பவர்களின் கழிவிரக்க வாக்குகள் தான், போட்டியாளர்களைக் காப்பாற்றி வருகிறது.
இதுவரை நடைபெற்ற பிக் போஸ் நிகழ்ச்சிகளில் இந்த முறை தான் போட்டியாளர்கள் பிக்போஸையே சோர்வடையச் செய்கின்றனர். மேலும் போட்டியாளர்களில் பலர் கடந்த 3 பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் ஏற்கெனவே பார்த்து விட்டு உள்ளே சென்றிருப்பதால், அவர்கள் தங்களது யுக்தியாகப் பயன்படுத்தும் விஷயங்கள் பார்வையாளர்களை எரிச்சலூட்டச் செய்கின்றன. டாஸ்க் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு, ஏதோ உலக யுத்தங்களில் கலந்து கொண்டது போல் வீட்டில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வது நகைப்புக்குரியது. வார இறுதி நாள்களில் வரும் நிகழ்ச்சித் தொகுப்பாளாரான கமலும் நாசூக்காக பல ‘டிப்ஸ்’களைக் கொடுத்தாலும் யாரும் கேட்பது போலத் தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஃபிரீஸ் டாஸ்க். 80 நாள்களுக்கு மேல் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் போட்டியாளர்களைக் காண அவர்களுக்கு நெருக்கானமானவர்கள், குடும்பத்தினர் யாராவது வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள். இதில் கவிஞர் சிநேகன் தந்தையின் வருகை, கர்ப்பிணியான தனது மனைவியைக் கண்ட சென்றாயன் வெளிக்காட்டிய அன்பு, பல வருடங்களாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து கனடாவில் வசித்த லாஸ்லியாவின் தந்தை வருகை, சான்டியின் குழந்தைப் பாசம் எனப் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்தமுறை ஃபிரீஸ் டாஸ்க் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேரடியாக நடக்குமா எனத் தெரியவில்லை. தெலுங்கு பிக்பாஸ் சீசனில் ஃபிரீஸ் டாஸ்க், போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் கண்ணாடி அறைக்குள் வந்து சந்தித்து விட்டுச் சென்றனர். அதே போல இங்கும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை 9 போட்டியாளர்கள் பிக்போஸ் வீட்டுக்குள் இருப்பதால் இந்த வாரம் யாராவது ஒருவரை வெளியேற்றிவிட்டு இந்த ஃபிரீஸ் டாஸ்க் நடக்கலாம்.
வழக்கமாக இறுதிக்கட்டத்தை எட்டும் இந்த நிகழ்ச்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை அப்படி இல்லை. வாரத்தின் இறுதி நாள் நிகழ்ச்சியை பார்த்தால் போதும், அந்த வாரம் முழுவதும் நடந்ததை போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் பேசி நமக்குப் புரிய வைத்து விடுகிறார்கள். இதுபோதாதென்று அடுத்த வாரம் தொடங்கும்போது கமல் சார்கிட்ட ஏன் இப்படிச் சொல்லணும் எனக் கேட்டு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் வாரம் முழுவதும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் செய்து விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் மூன்று பருவங்கள், இன்றுவரை பேசப்படக் காரணம் அதில் பங்கேற்ற போட்டியாளர்களும் அவர்களது தனித்துவமும் தான். எஞ்சியிருக்கும் நாள்களிலும் தனித்துவம் இல்லாமல் போட்டியாளர்கள், விதிகளை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி பிக்பாஸையே சோர்வடையச் செய்து விடுவார்கள் என்பதால், பிக்போஸ் 4-ம் பருவம் நிச்சயம் புஸ்வாணமாகி விடும் என்பதில் வியப்பில்லை.
0 Comments
No Comments Here ..