நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் பிற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு தற்போதைய நிலையில் பாதிப்பு இல்லை என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.அதேநேரம், சுகாதார தரப்பினரின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்த சகல இடங்களையும் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற பணியாளர்கள் எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற செயலாளர் நாயகம், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திலேயே பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான தயாசிறி ஜெயசேகர மற்றும் வாசுதேவநாணயக்கார ஆகியோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீமிற்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
0 Comments
No Comments Here ..