06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொதுச்சபையில் பாரப்படுத்தல், சிரிய பாணி சுயாதீன விசாரணை யோசனைகள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழர் தரப்பின் சார்பில் பொது ஆவணம் சமர்ப்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய 3 பெரிய கட்சிகளிற்கிடையில் பொது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

3 கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வரைபு தயாரிக்கப்பட்டும் விட்டது.

3 கட்சிகளின் யோசனைகளையும் உள்ளடக்கியதாக இணக்கமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.வரைபு தயாரிப்பதில் 3 கட்சிகளும் 3 திசையில் நின்றதால் இழுபறியான நிலைமை இருந்தது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யோசனைகளுடன் மற்றைய இரு கட்சிகளும் இணங்காததால் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், க.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சில தினங்களின் முன் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் விக்னேஸ்வரன் தரப்பிலும் விட்டுக்கொடுப்புக்கள் செய்யப்பட்டன.

திடீர் திருப்பமாக, நேற்று முன்தினம் மதியத்திற்கு முன்னதாக அனைத்து தரப்பினரிடமும் இணக்கம் ஏற்பட்டது.

அதில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சிரியாவில் அமுல்ப்படுத்தப்பட்டதை போன்ற சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறை ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் பேரவையில் இருந்து ஐ.நா பொதுச்சபைக்கு நகர்த்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா கண்காணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வரைபு இறுதிசெய்யப்பட்ட பின்னர் கஜேந்திரகுமார் தரப்பில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதாவது, ஒவ்வொரு தரப்பிலிருந்தும் ஒவ்வொருவர் கையொப்பமிட்டால் போதுமென்பது கஜேந்திரகுமார் தரப்பின் நிலைப்பாடு.

எனினும், மற்றைய இரண்டு தரப்பிலும் அதற்கு இணக்கப்பாடு இல்லை. மாவை சேனாதிராசாவை அரங்கிலிருந்து அகற்றும் முயற்சிகளின் தொடர்ச்சியான ஒரு பின்னணி காரணத்துடன் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவலுண்டு.

கஜேந்திரகுமாரின் யோசனையை விக்னேஸ்வரன் தரப்பு அங்கீகரிக்கவில்லை. கஜேந்திரகுமார் தரப்பில் ஒரு கட்சி மட்டுமே உள்ளது. அதனால் அவர் மட்டுமே கையெழுத்திடலாம். ஆனால் விக்னஸ்வரன் தரப்பு, கூட்டமைப்பின் நிலைப்பாடு அப்படியல்ல.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒவ்வொருவர் கையெழுத்திடும் விதமாக ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் அதன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

ஒரு கையொப்படிடவே இடம் காணப்பட்ட போதும், ஒன்றன் பின் ஒன்றாக அவர்கன் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மட்டுமே கையொப்பமிட்டுள்ளார்.

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரைபு என்பதால், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட வேண்டுமென்ற நிலைப்பாடும் வலுத்து வருகிறது. இதனால், கூட்டமைப்பிற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை வரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.




பொதுச்சபையில் பாரப்படுத்தல், சிரிய பாணி சுயாதீன விசாரணை யோசனைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு