அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து வெளியேறும் தருணத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பயணத் தடையை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை இந்த உத்தரவு நீக்குவதுடன், பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு பயணிகளை பயணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற பின்னர், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் திங்களன்று கையெழுத்திட்டார்.
ட்ரம்பின் இந்த உத்தரவு பகிரங்கப்படுத்தப்பட்ட உடனேயே, அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேக்கவுள்ள ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி இதனை மறுத்து கருத்து வெளியிட்டுள்ளார்,
எங்கள் மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில், நிர்வாகம் இந்தக் கட்டுப்பாடுகளை ஜனவரி 26 ஆம் திகதி நீக்க விரும்பவில்லை என்று அவர் டுவிட் செய்துள்ளார்.
அத்துடன் தொற்றுநோய் மோசமடைந்து வருவதோடு, மேலும் பல தொற்று வகைகள் உலகெங்கிலும் உருவாகி வருவதால், இது சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நேரம் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
0 Comments
No Comments Here ..