20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பாராளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?: சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஷ்!

மாகாணசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்ந்தவர்கள் போட்டியிடாமல், கட்சி சாராதவர்கள் போட்டியிட வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளத்தக்க யோசனையல்ல. அப்படியென்றால் நாட்டில் எதற்கு அரசியல் கட்சிகள்?. மாகாணசபைக்கு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் போட்டியிட கூடாது என்றால், பாராளுமன்ற தேர்தலில் அவ்வாறானவர்கள் ஏன் போட்டியிட்டார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

யாழில் நேற்று (21) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் சாராதவர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை தயாரிப்பது பற்றி கஜேந்திரகுமாருடன், சுமந்திரன் பேசியதாக, சுமந்திரன் ஆதரவு பத்திரிகையொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

அது பொருத்தமற்ற யோசனையென்பதை சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைத் தேர்தல் நடக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்தத் தேர்லில் பற்றிய ஊடகச் செய்திகள் பல வெளியாகின்றன. முக்கியமாக கட்சி பிரமுகர்களை தவிர்த்து துறைசார் நிபுணர்கள் அடங்கிய பொது பட்டியல் ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிட வேண்டும் என செய்தி வெளியாகியிருந்தது.

அதுபற்றி சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசியதாகவும் செய்திகள் வந்தன. அதன் உண்மைத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. அந்தச் செய்திகளை முன்வைத்து சில பத்திரிகைகளில் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல் எப்போது வரும் என்பது இதுவரை தெளிவாகவில்லை. புதிய அரசியல் சாசனத்துக்கு பின்னர் வருமா, இந்த வருடமா அடுத்த வருடமா, அரசியல் சாசனம் வருமா வராதா, எதுவும் தெரியாது.

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய ஆட்சி அதிகாரத்தை கொண்டு வரவேண்டும் என சிந்தித்தால், நாங்கள் ஒரு பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்பது தான் சரியே தவிர, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடாமல் இருப்பது என்பது பொருத்தமானதல்ல.

அப்படியென்றால் நாட்டில் அரசியல் கட்சிகளே தேவையில்லையே. அதுதான் சரியென்று சொன்னால், பாராளுமன்றத்துக்கு துறைசார்ந்தவர்களை போட்டிருக்கலாமே. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் ஏன் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற கேள்வியும் உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டி போடலாம் என்றால், மாகாணசபை தேர்தலில் அவர்கள் ஏன் போட்டியிடக் கூடாதென்பது எனக்கு தெரியவில்லை.

மக்களை குழப்பக்கூடிய விதமாகவும், ஊடகங்களில் தினமும் தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காகவும், இவ்வாறான செய்திகளை வெளியிடுவது சிரிப்புக்குரிய விடயம் என்றார்.




பாராளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிட்டீர்கள்?: சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஷ்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு