16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் விசாரணை

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் காவல்துறை பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை வழங்கப்பட்டும் அதனை மீறி அப் பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து நேற்று (17) மட்டக்களப்பு காவல் நிலைய அதிகாரிகள் தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று காலை, எமது அலுவலகத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு காவல் பிரிவைச் சேர்ந்த காவல் உத்தியோகத்தரால், “முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் காவல்துறை பிரிவினரால் கடந்த 06.02.2021 அன்று எனக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளை எனக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் நான் அதனையும் மீறி நான் அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவுகள் தங்களிடம் உள்ளதாகக்கூறி” என்னிடம் வாக்குமூலம் கோரப்பட்டது.

அதற்கு பதிலளித்த நான் “இந்த நாடு சனநாயக நாடு. எனக்கிருக்கும் சனநாயக உரிமையின் அடிப்படையில் இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ளச் சென்றது உண்மைதான். ஆனால், மாங்குளம் காவல்துறை மாங்குளம் புகையிரதக் கடவையை அண்மித்ததாக வைத்து நான் மட்டுமே வந்த எனது வாகனத்தினை மறித்து அந்த நீதிமன்றக் கட்டளையினை வழங்கினார்கள். அதனை வழங்கியதன் பின், நீதிமன்றத்தின் கௌரவத் தன்மையினை மதித்து, எனது பெயர் அக்கட்டளைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படா விடினும்கூட அதனை கௌரவமாக மதித்து தொடர்ந்து அப்பேரணியில் செல்வதை நிறுத்திக்கொண்டு நான் மட்டக்களப்புக்கு திரும்பிவிட்டேன்” என்பதை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.





பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் விசாரணை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு