நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான பகுதியாகும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட்டால், அது இரத்தத்தில் இருந்து நச்சுக்களை நீக்குவது மட்டுமின்றி, இன்னும் பல நன்மைகளையும் விளைவிக்கும். அதில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளவும் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்றவை அடங்கும்.
எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது என்பது மிகவும் முக்கியம். சிறுநீரகங்களில் சிறு பிரச்சனை என்றாலும் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். அதற்கு சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் உடல் தெரிவிக்கும் சில அறிகுறிகளைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
சிறுநீரக நோய்கள் சிறுநீரகங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியை செய்கின்றன. இவற்றில் சிறு தவறு இருந்தாலும், ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படும். துரதிர்ஷ்டவசமாக சிறுநீரக நோய்கள் மிகவும் பொதுவானவையாக மாறிவிட்டது. பெரும்பாலும் தீவிர கட்டத்தில் மட்டுமே சிறுநீரக நோய்கள் கண்டறியப்படுகின்றன. கடுமையான வலி அல்லது தீவிரமான அசௌகரியத்தை அனுபவிக்கும் வரை சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையை பலர் கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்த நிலைமையானது சிறுநீரகங்கள் தீவிரமாக சேதமடைந்திருப்பதற்கான அறிகுறி. பொதுவாக உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடல் ஒருசில சிக்னல்களை நமக்கு தெரிவிக்கும். சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் நமது உடல் நமக்கு தெரிவிக்கும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள் சரியாக செயல்படும் சிறுநீரகங்கள் உடல் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கின்றன. சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்பட்டால், அது மிகப்பெரிய அபாயங்களைக் கொண்டு வரக்கூடும். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். உங்கள் சிறுநீரகங்களில் சிறு தவறு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
சிறுநீர் மாற்றம் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரின் நிறத்தை எப்போதும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரின் நிறமானது நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பல விஷயங்களை சொல்லக்கூடியவை. ஒருவரது சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், சிறுநீரானது அடர் நிறத்தில், நுரைப் போன்று இருப்பதுடன், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் மற்றும் சிறுநீரின் அளவில் மாற்றம் தெரியவரும். இவற்றைக் கொண்டு சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே அறியலாம்.
சோர்வு ஆரோக்கியமான சிறுநீரகங்கள் சரியான அளவிலான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்யும். அதனால் தான் சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாக சோர்வும் ஒன்றாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் தான் உடல் சோர்வடையும்.
மூச்சு விடுவதில் சிரமம் சிறுநீரக பிரச்சனைகளுடன் மூச்சுத் திணறலும் தொடர்புடையவை. ஏனெனில் குறைவான இரத்த சிவப்பணுக்களால் உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இல்லாமல் போகிறது. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே உங்களுக்கு திடீரென்று மூச்சு விடுவதில் கஷ்டமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை பிரித்து வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. இந்நிகழ்வு சரியாக நடைபெறாமல் போகும் போது, உடலில் நச்சுக்கள் தேங்க ஆரம்பித்து, அதன் விளைவாக சருமத்தில் அரிப்பு மற்றும் பிற சரும பிரச்சனைகள் எழக்கூடும்.
வாய் துர்நாற்றம் வாயில் திடீரென்று கடுமையான துர்நாற்றம் வீச தொடங்கினால், இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் நச்சுக்கள் அதிகமாகிறது என்றால், சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.
0 Comments
No Comments Here ..