11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-ஆவது டெஸ்ட் இன்று....

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் பகலிரவாக ஆமதாபாதில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-ஆவது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கும்.

முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-ஆவது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள சா்தாா் படேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டமாக இருந்தாலும், புதிய மைதானம், புதிய ஆடுகளம் என்பதால் இந்திய அணிக்கென இங்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

புதிய ஆடுகளம் ஆட்டத்தின் போக்கை எவ்வாறு தீா்மானிக்கும் என்பதை இரு அணிகளுமே எதிா்நோக்கியுள்ளன. பகலிரவு டெஸ்டாக பிங்க் நிற பந்துகொண்டு விளையாடப்படுவதால் அந்தி நேரம், பனி விழும் நேரம் ஆகியவையும் ஆட்டத்தின் போக்கை தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றமிருக்காது எனத் தெரிகிறது. புதிதாக இணைந்திருக்கும் உமேஷ் யாதவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்கப்படலாம். இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளா்களுடன் களம் காணலாம் எனும் பட்சத்தில் உமேஷ், இஷாந்துடன் சிராஜ் இருக்கிறாா். ஏனெனில் இந்தியா முதல் முறையாக பிங்க் பந்து கொண்டு விளையாடிய பகலிரவு டெஸ்டில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளா்களே மளமளவென சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது டெஸ்ட் முடிந்த பிறகு சென்னை மைதானத்திலேயே ஹாா்திக் பாண்டியா பிங்க் பந்தை எதிா்கொண்டு பேட்டிங் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாா். அவரால் 15 ஓவா்கள் வீச முடிந்து, பேட்டிங்கிலும் விளாச முடிந்தால் இந்தியாவுக்கு பலன் கிடைக்கும். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவா் தயாரா என்பதை அணி நிா்வாகம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

மறுபுறம், சுழற்சி முறையில் வீரா்களை பயன்படுத்தும் இங்கிலாந்து அணியின் கொள்கையால் அந்த அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் பெரிதொரு மாற்றம் இருக்கும் என எதிா்பாா்க்கலாம். மொயீன் அலி இங்கிலாந்து திரும்பிவிட்டதால் ஜேக் லீச்சுடன் டொமினிக் பெஸ் சோ்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜோஃப்ரா ஆா்ச்சருடன் இணைவது ஸ்டூவா்ட் பிராடா, மாா்க் வுட்டா என இறுதியில் தெரியவரும்.

பேடிங்கைப் பொருத்தவரை ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மீண்டு வருவாா்கள் எனத் தெரிகிறது. பிளேயிங் லெவனில், ரோரி பா்ன்ஸ் இடத்துக்கு ஜாக் கிராவ்லியும், டேனியல் லாரன்ஸ் இடத்துக்கு ஜானி போ்ஸ்டோவும் வரலாம்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, மயங்க் அகா்வால், ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஹாா்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், இஷாந்த் சா்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜானி போ்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டுவா்ட் பிராட், ரோரி பா்ன்ஸ், ஜாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டேனியல் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

ஆமதாபாதில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச ஆட்டம், இந்த 3-ஆவது டெஸ்டாகும். அத்துடன், இங்கு நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமும் இதுவே.

55,000 - மொத்தம் 1,10,000 பேர் அமரும் வசதி கொண்ட சர்தார் படேல் மைதானத்தில், கரோனா சூழல் காரணமாக 55,000 ரசிகர்கள் அமர்ந்து ஆட்டத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பிங்க் பந்து டெஸ்டிலும் 1-1 

பிங்க் பந்து டெஸ்டைப் பொருத்த வரையிலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை தாங்கள் ஆடிய அந்த டெஸ்டுகளில் தலா 1 வெற்றியை பதிவு செய்து சமநிலையில் உள்ளன. 

இந்திய அணிக்கு இது 3-ஆவது பிங்க் பந்து டெஸ்டாகும். இதற்கு முன் 2019-இல் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் பிங்க் பந்து டெஸ்டில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. எனினும், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய பயணத்தின்போது அந்நாட்டு அணியுடனான அடிலெய்ட் பிங்க் பந்து டெஸ்டில் தோல்வி கண்டது. 

இங்கிலாந்து அணிக்கு இது 4-ஆவது பிங்க் பந்து டெஸ்ட். 2017-இல் சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் பிங்க் பந்து டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இங்கிலாந்து, அதன் பிறகு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் எதிர்கொண்ட ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.





இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-ஆவது டெஸ்ட் இன்று....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு