காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரடியாக சந்தித்து, அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களிற்கு அப்பால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்சனை என்ன என்பதை ஜனாதிபதி ஆராயவுள்ளார்“ என அவர் தெரிவித்துள்ளார்.
த இந்து பத்திரிகையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இப்படியொரு சந்திப்பு நடந்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதியாகவோ, அந்த பதவியில் இல்லாமலோ கோட்டாபய ராஜபக்ச சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் போரின் போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு, ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோருபவர்களாகவே உள்ளனர்.
இதில் அனேகர், யுத்தத்தின் இறுதியில் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி தமது உறவுகளை கையளித்தவர்கள். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த காலப்பகுதியிலேயே தமது உறவுகள் அதிகமாக காணாமல் போனதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம்சுமத்தி வருகிறார்கள்.
“அரசியல்வாதிகள் சொல்வதைக் காட்டிலும், அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களின் உண்மையான குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவும் விரும்புகிறார். இது மிக விரைவில் நடக்கும், ”என கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த கேள்வியொன்றிற்கு, எதிர்காலத்தை பற்றி தாம் சிந்தித்துக் கொண்டிருக்க, கடந்த காலத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதாக செய்தியாளரை பார்த்து குறிப்பிட்டார். தமது உறவுகளிற்கு என்ன நடந்ததென கோரி, வடக்கு கிழக்கில் 5,000 நாளுக்கும் அதிகமாக உறவுகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈ.பி.டி.பி அமைப்பினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அமைப்பொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..