29,Mar 2024 (Fri)
  
CH
சினிமா

விஜயகுமாரின் ஒரே மகன் அருண்குமார் நடிக்க வந்தது எப்படி?

நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

"அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து

கொண்டார்.

"அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

"எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்






விஜயகுமாரின் ஒரே மகன் அருண்குமார் நடிக்க வந்தது எப்படி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு