தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.
ஒரு நாள் பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும், பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரிடமிருந்த பேயை ஓட்டி, அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும், பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. கூட்டத்தினர் வியந்து நின்றனர். திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர்.
ஆனால் இதைக் கேட்ட பரிசேயரும், எருசலேமில்இருந்து வந்திருந்த மறைநூல் அறிஞரும், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும், “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது, “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும், வீடும் நிலைத்து நிற்காது. சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? அதுவே அவனது அழிவு.
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே, நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
வலியவர் ஆயுதம் தாங்கி தம் அரண்மனையைக் காக்கிறபோது, அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது. அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக் கலங்களையும் பறித்துக் கொண்டு, அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் எவரும் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறமாட்டார். அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்.’’
“இவனை தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..