காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
காதல் மனித வாழ்க்கையை துளிர்க்கவும் வைக்கிறது. துடிக்கவும் வைக்கிறது. எத்தனையோ காதலர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும், தோல்வியடையும் ஒரு சில காதலர்களின் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்துவிடுகிறது. காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
கட்டுக்கடங்காத காதல் தீயால் ஏற்படும் கோர சம்பவங்களையும், இழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும். அதை பற்றி விரிவாக அலசுவோம்!
காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் தனக்குள் `காதல்வசப்பட்டிருக்கும் நான் எதற்காக அவளை விரும்புகிறேன்?' என்ற கேள்வியை முதலில் தனக்குள் எழுப்பவேண்டும்.
ஒருவர், தான் பார்க்கும் பெண்களில் தனக்கு பொருத்தமானவளாக எந்த பெண்ணை கருதுகிறாரோ அந்த பெண் மீது அவருக்கு காதல் பூக்கிறது. அப்போது அவர் கீழ்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் விடைதேடுவது மிக முக்கியம்.
* அந்த பெண் தனக்கு பொருத்தமானவள் என்று கருதுகிறீர்களா?
* அவளது விருப்பு, வெறுப்புகள் என்ன என்பது தெரியுமா?
* அவளது வாழ்வியல் மற்றும் குடும்ப சூழல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
*அவளது குணாதிசயம் என்ன?
*அவளது அனைத்து விஷயங்களும் உங்களோடு பொருந்தும் என்று கருதுகிறீர்களா?
இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்து, அவள் தனக்கு பொருத்தமானவள் என்று அறிந்த பின்புதான் காதலிக்கத் தொடங்கவேண்டும். ஆனால் பலரும் தனது வாழ்க்கையில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும், தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவும்தான் காதலிக்கிறார்கள். அதனால்தான் அவர்களது காதலின் அஸ்திவாரமே ஆட்டம் காண்கிறது. தனது உணர்வுகளையும், உற்சாகத்தையும், தனிமையையும், தவிப்பையும் பங்கிட ஒரு பெண் தேவை என்ற எண்ணத்தில் தொடங்கும் காதல், நாளடைவில் கசப்புகளால் நிரம்பிவழிகிறது. அவர்களுக்குள்தான் பிரச்சினைகள் எழுகிறது.
சிலர் காதல் தரும் கிளர்ச்சியை அனுபவிப்பதற்காக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். `என் நண்பர்களுக்கெல்லாம் காதலி இருக்கிறாள். எனக்கு மட்டும் இல்லை' என்ற குறையை போக்கிக்கொள்ள காதலில் இறங்குகிறவர்களும் உண்டு. பொழுதுபோக்குக்காக காதலில் ஈடுபடுகிறவர்களும் இருக்கிறார்கள். அழகான பெண் ஒருவரை பார்த்துவிட்டால் அவரை எப்படியாவது அடையவேண்டும் என்பதற்காக காதலிப்பவர்களும் நம் மிடையே உண்டு. நண்பர்களி டையேயான போட்டியில் வெல்வதற்காக காதல்களம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் காதல் கரையேறுவது இல்லை. பெண்கள் மீது ஏற்படும் அழகையும், ஈர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டு எழும் காதல் பெரும்பாலும் அற்ப ஆயுள் கொண்டதாகவோ, ஆபத்தில் முடிவதாகவோதான் இருக்கிறது.
பெண்ணின் அழகால் ஈர்க்கப்பட்டு அவளை காதலிக்க விரும்பும் ஆணின் மனதில் பாலியல் தேவைகள் இருந்துகொண்டிருக்கக்கூடும். அதற்கு பெண் இடம்கொடுத்துவிட்டால் அந்த ஆணின் தேவை முழுவதும் அதை சுற்றியே இருக்கும். அதை அனுபவித்து பழகியவனுக்கு, அதில் தடை ஏதாவது ஏற்பட்டால் அவனால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அப்போது அவன் வன்முறை, மிரட்டல், கொலை முயற்சி போன்றவைகளில் ஈடுபடக்கூடும்.
சிலர் காதல் என்ற பெயரில் பெண்களை விடாமல் துரத்துவார்கள். அந்த பெண்ணுக்கு அதில் விருப்பம் இருக்காது. உடனே `நான் இத்தனை நாட்கள் உன் பின்னால் சுற்றியும் நீ என் காதலை அங்கீகரிக்கவில்லை. அதனால் உனக்கு நான் தக்கபாடம்புகட்டப் போகிறேன்' என்று கூறிக்கொண்டு பழிவாங்க முயற்சிப்பார்கள். இவர்கள் ஒருதலைக்காதலர்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இத்தகைய ஆண்கள், தங்களிடம் சிரித்துப்பேசும் பெண்கள் அனைவரையுமே தங்களை காதலிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தவறான புரிதல் கொண்டவர்களே `அவள் என்னை பார்த்தாள்.. சிரித்தாள்.. பேசினாள்.. பின்பு காதலை நிராகரித்துவிட்டாள்' என்று கூறிக்கொண்டு அவளுக்கு உயிரிழப்பைகூட ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.
ஒரு பெண், ஆணின் காதலை நிராகரிக்கிறாள் என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை ஆண் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதே நேரத்தில் அந்த காரணத்தைக் கேட்டு பெண்ணை பின்தொடர்ந்து காயப்படுத்த முயற்சிக்கக்கூடாது. ஒருவரது காதலை நிராகரிக்க பெண்ணுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். எல்லா காரணங்களையும் எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் அவளால் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. அதனால் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, காதலை இடையில் முறிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ அதில் இருந்து விலகிவிடவேண்டும். காதலித்துதான் ஆகவேண்டும் என்று எந்த பெண்ணையும் நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..