பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகை அழிக்க வல்ல அந்த விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அது அவரது கழுத்திலேயே நின்றுபோனது. விஷத்தின் தாக்கத்தால் மயங்கி, பின்னர் விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்த நடனம் ஆடி, அருளினார். அதுவே ‘பிரதோஷம்’ எனப்படுகிறது. இதற்கு ‘தோஷம் இல்லாத நேரம்’ என்று பொருள் கொள்ளலாம். பிரதோஷ நாள்
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷம் வரும்.
பிரதோஷ நேரம்
சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும், சூரியன் மறைவுக்குப் பின் மூன்றே முக்கால் நாழிகையும் கொண்டது, பிரதோஷ நேரம். சுமார் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை.
சிவனை வணங்கும் முறை
வழக்கமாக இடமிருந்து வலமாகச் சுற்றி வந்துதான் இறைவனை வணங்குவோம். ஆனால் பிரதோஷ வேளையில், வலமும், இடமும் மாறி மாறி வந்து ஈசனை வணங்க வேண்டும். இதற்கு ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ என்று பெயர். வில்வ இலையால் தொடுக்கப்பட்ட மாலையை ஈசனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பிரதோஷ பூஜை
இந்த கால வேளையில், நந்திக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படும். பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதே பிரதோஷ பூஜையாகும். அப்படி வலம் வரும் நேரத்தில் வேதங்களை பாராயணம் செய்தும், நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை வணங்குவார்கள்.
சனிப் பிரதோஷம்
விஷம் அருந்தி தெளிந்த பின் ஈசன் ஆடிய நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமை. எனவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பு பெறுகிறது.
நந்தியை வணங்கும் முறை
சிவப்பு அரிசி, நெய் விளக்கு, அருகம்புல் மாலை ஆகியவற்றை நந்திக்கு படைக்க வேண்டும். பின்னர் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, ஒரு பிடி அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். இதனால் சனியால் ஏற்படும் இன்னல் விலகும்.
மகா பிரதோஷம்
சித்திரை மாதம் வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷ நாள், ‘மகா பிரதோஷம்’ எனப்படுகிறது.
பிரதோஷ வகை
சனிப்பிரதோஷம், சோமவார பிரதோஷம் தவிர்த்து, 20 வகையான பிரதோஷங்கள் உள்ளன.
பிரதோஷ விரதம்
இந்த விரதம் மேற்கொள்பவர்கள், பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, பிரதோஷ வேளையில் சிவாலய தரிசனத்தை முடித்த பிறகு உணவருந்த வேண்டும். தொடர்ந்து பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..