24,Apr 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த மசோதாவில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக் கனியாகி விடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. ‘நீட்’ தேர்வால் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவ-மாணவிகளில் அரியலூர் அனிதா உள்பட சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று மேட்டூரை சேர்ந்த ஏழை மாணவன் தனுஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் 202 நகரங்களில் 3 ஆயிரத்து 860 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். என்றாலும் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ-மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்து வருகிறது.

மாணவ-மாணவிகளின் தற்கொலைகள் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநில பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது. இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டபோராட்டம் இப்போது தொடங்குகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்திய துணை கண்டத்தின் பிரச்சினையாக கருதி அனைத்து மாநில முதல்-அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது.

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது. சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது.

சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய அனைத்து மாணவர்களையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த மசோதாவில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்டு இருந்தது.

இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தரும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த மசோதாவை ஆதரிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். நீட் தேர்வால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பட்டியலையும் முன்னுதாரணம் காட்டி இனி நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா நிறைவேறியது. இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா? என்பது உறுதியாகும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு