முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வழியாக நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவருக்கு தெரியாமலேயே அவரது சமூகவலைத்தள கணக்கை தவறான வழிகளில் பயன்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் முகநூல் கணக்கிலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே சமூக வலைத்தளங்களை பெண்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் கூறும் ஆலோசனைகள் இதோ...
தவறாக பயன்படுத்தப்படும் சூழல்
சமூக விரோதிகள் பலர் பெண்களின் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பெண்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்பி இணைந்து கொள்கின்றனர். பிறகு அந்த பெண்ணை அவர்களுக்கு தெரியாமல் ஆபாச காட்சிகளை பகிரும் மெசெஞ்சர் குழுக்களில் இணைத்து அவர்களையே அக்குழுவுக்கு உரிமையாளராகவும், நிர்வாகியாகவும் மாற்றி விடுகின்றனர். பெண்கள் பகிரும் புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை அப்படியே நகல் எடுத்து அவர்கள் பெயரிலேயே போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கிஅவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பண உதவி கேட்டு ஏமாற்றுகின்றனர். மேலும் அந்த பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டும் மிரட்டுகின்றனர்.
யாருக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும்?
எப்போதாவது ஒருமுறை முகநூலைப்பயன்படுத்துபவர்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. சமூக வலைத்தளங்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், ஒரு வசதி அறிமுகமாகும் போதே அதற்கான பாதுகாப்பு வசதிகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப புதுப்பித்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது பயன்படுத்துபவர்கள் இவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார்கள். எனவே பெண்கள் தங்களின் முகநூல் பக்கத்தை அந்நியர்கள் பயன்படுத்த முடியாதவாறு பாதுகாப்புடன் கையாள வேண்டும்.
தற்காத்துக்கொள்வது எப்படி?
நமக்கு தெரியாத அந்நிய நபர்களின் நட்பு கோரிக்கையை ஏற்கும் முன்பு, அவரின் பக்கத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.பெண்கள் பெயரிலிருந்தே நட்பு கோரிக்கை வந்தாலும் அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் தான் உண்மையிலேயே பெண்ணாக இருக்க முடியும். இம்மாதிரியான விஷயங்களை ஆராய்ந்த பிறகு அவரின் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டும். எப்போதாவது ஒருமுறைதான் முகநூலை பயன்படுத்துபவர் என்றால் அவ்வப்போது வரும் புதுப்புது வசதிகளை ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
புகார் அளிப்பது எப்படி?
முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை பற்றி அந்த நிறுவனத்திடமே புகார் அளிக்க முடியும். அவர்கள் குறிப்பிட்ட நபரின் பக்கத்தை ஆராய்ந்து தடை செய்து விடுவார்கள். அதையும் தாண்டி வேறு வகைகளில் தொடர்ந்து தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..