28,Mar 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை விழுப்புரம் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் இருந்தது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்குவதற்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளில் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும்.

இத்திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது 1½ மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.

தன்னார்வலர்களுக்கான இணையவழி பதிவு நடைபெற்று வருகிறது. 34 லட்சம் மாணவர்களுக்கு 1.70 லட்சம் தன்னார்வலர்கள் தேவைப்படும். தற்போது வரை 62 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

தன்னார்வலர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை பிளஸ்-2 வகுப்பு முடித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் கற்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்படுவர். வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும். சிறந்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும்.

ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும்.

இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இன்று (27-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து பேசுகிறார்.

இதற்காக அவர் கார் மூலம் மரக்காணம் வருகிறார். அவரை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.பி.க்கள் பொன்கவுதமசிகாமணி, ரவிக்குமார் மற்றும் எம்.எல். ஏ.க்கள் வரவேற்கின்றனர்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை விழுப்புரம் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு