25,Apr 2024 (Thu)
  
CH
விளையாட்டு

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து

கிறிஸ் ஜோர்டான் வீசிய 17-வது ஓவரில் நியூசிலாந்து அணி இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணியின் வெற்றி பறிபோனது.

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்தது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்கள் சேர்த்தனர்.

3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

இதனால் நியூசிலாந்து 2.4 ஓவரில் 13 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன், டேவன் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. இந்த ஜோடி 13.4 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. டேவன் கான்வே 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலை இருந்தது.

17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. ஆகவே, ஒரே ஓவரில் ஆட்டம் நியூசிலாந்து கைக்குள் வந்தது.

கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை அடில் ரஷித் வீசினார். இந்த ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸ் விளாச, மிட்செல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருந்தாலும் கடைசி பந்தில் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். நீஷம் அதிரடி நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.


கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டேரில் மிட்செல் 47 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு