அழகுக்காக செடி வளர்க்கவா அல்லது காய்கறி கீரை அறுவடை செய்து நம்முடைய தேவைக்காக உபயோகப்படுத்திக் கொள்ளவா என்பதை சரியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
பொழுதுபோக்குகள் மனதையும் உடலையும் சீராக்கும் வல்லமை கொண்டவை. அதில் மாடித் தோட்டத்தை குறிப்பிடத்தக்க ஒன்றாக சொல்லலாம். வீட்டின் முன்புறம் புழக்கடையில் இடம் இல்லாதவர்கள் நகரத்தின் நடுவில் வாழ்பவர்களுக்கு தோட்டம் போட வேண்டுமென்றால் மாடித்தோட்டமே சிறந்த தேர்வாக இருக்கும். தோட்டம் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனால் வேலைப்பளு அதிகமாகி விடுமோ என்று பயப்படுவார்கள். இதில் ஏதாவது நமக்கு லாபம் இருக்குமா என்றும் நினைப்பார்கள். முதலில் தொடங்கும் போது சற்று செலவு செய்து கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி மெனக்கெட்டால் அதன் பின் நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தை மட்டுமே கூட மாடித்தோட்டத்தில் கவனித்தால் போதுமானதாக இருக்கும். நிறைய பலனும் இதனால் கிடைக்கும்.
மாடித்தோட்டம் போட முதலில் நமக்கு மொட்டை மாடியில் போதுமான இடம் இருக்க வேண்டும். தேவையான அளவு மண், தொழுஉரம், மக்கும் இலைதழைகள், பயன்படுத்தப்படாத நெகிழி டப்பாக்கள், குச்சிகள் போன்றவற்றைக் கொண்டே நாம் மாடித் தோட்டத்தை அமைத்துவிட முடியும். தோட்டம் அமைப்பதற்கு முன்பாக சரியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எதற்காக போடுகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அழகுக்காக செடி வளர்க்கவா அல்லது காய்கறி கீரை அறுவடை செய்து நம்முடைய தேவைக்காக உபயோகப்படுத்திக் கொள்ளவா என்பதை சரியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிழலுக்காக கூட சிலர் மாடியில் செடி வளர்க்கின்றனர். எனவே என்ன நோக்கத்திற்காக என்று முன்னரே முடிவு செய்தால் அதற்குரிய வகையில் தோட்டத்தை அமைக்கலாம். இடத்தின் அளவிற்கு ஏற்ப செடிகளின் அளவையும் எண்ணிக்கையும் தீர்மானிக்க வேண்டும். நீர் வடிவதற்கு ஏற்றபடி தோட்டத்தை அமைக்க வேண்டும்.
ஏனென்றால் நீர் ஓதம் காத்தால் மாடி கான்கிரீட் விரிசல் விட நேரிடும். தோட்டத்தின் பளுவை முடிந்தவரை குறைப்பதற்கு மண் தொட்டியை தவிர்த்து பிளாஸ்டிக் தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றை உபயோகிக்கலாம். மண்ணின் அளவைக் குறைத்து மக்கு பொருட்களை கூட்டிக் கொள்ளலாம். தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது.
முதலில் காய்கறி பயிரிட விரும்புபவர்கள் கீரை விதைத்து பழகிக் கொள்ளலாம். குறைந்த நாட்களில் அறுவடை செய்யலாம். ஓரிரு அடி இடத்தில் கூட ஒரு கட்டு கீரையை அறுவடை செய்யலாம். அதை சமைத்து பாருங்கள் பிறகு நீங்களே உற்சாகமாகி மற்ற செடிகளை வளர்ப்பதற்கு தயாராகி விடுவீர்கள். பட்டம் பார்த்து விதைத்தால் நமக்கு பருவத்திற்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்கும். சில காய்கறிகளை அப்படியே விதைக்கலாம். வெண்டைக்காய், கொடி காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அப்படியே விதைக்கலாம். தக்காளி, கத்திரி, முள்ளங்கி போன்றவற்றை நாற்று விட்டு பின்பு எடுத்து நடவேண்டும்.
நல்ல ஆர்வம் கொண்ட நபர்கள் காய்கறி செடி மட்டுமல்லாமல் மரங்களைக் கூட மொட்டைமாடியில் வளர்க்கின்றனர். வாழை, பப்பாளி, முருங்கை, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, மாங்காய் போன்ற மரங்களை வளர்க்கலாம். இவைகள் ஓரளவு இருக்கும் இடத்திற்கு ஏற்ப வளரக்கூடியவை. கொடிகளில் முல்லை,, மல்லிகை சம்பங்கி போன்றவைகள் பலகாலம் வாழக்கூடியவை. இவற்றை பந்தலிட்டு வைத்தால் எப்போதும் மாடியில் நிழலுடன் பூவும் கிடைக்கும். கொஞ்சம் கீழே தரையாய் இருந்தால் திராட்சையை தரையில் வளர்த்து மாடியில் பந்தல் போட்டு விடலாம்.
ஒரு சிலர் வெறும் மூலிகைகள் மட்டும் வளர்த்து வருகிறார்கள். கள்ளிச்செடி மட்டும் வளர்ப்பவர்கள் போன்சாய் மட்டும் வளர்ப்பவர்கள் என்று பலருக்கும் மாடித் தோட்டம் ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொன்றும் ஒருவகை பட்டதாக இருக்கின்றன. அவற்றுக்கு தக்கபடி மண் நீர் உரம் மற்றும் கவனிப்பு முறைகள் மாறுபடும். வேறுசிலர் வெறுமனே அலங்கார செடிகளை வளர்த்து விற்பனை செய்ய மாடித் தோட்டத்தை பயன்படுத்துகின்றனர். மாடித் தோட்டம் என்பது சின்ன விஷயம் இல்லை. ஒருவரின் மனநிலைக்கும் அறிவிற்கும் தக்க இதன் பண்பு மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு சில நாடுகளில் மாடித் தோட்டத்தில் நெல்லை கூட நல்ல மகசூல் எடுத்து அறுவடை செய்து காட்டியுள்ளனர்.
மாடித் தோட்டத்திற்கு தேவையான உரத்தை நாமே வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். இதற்கு பெரிய தொழில்நுட்பம் எதுவும் தேவையில்லை. ஒரு நெகிழி டப்பாவில் தினசரி நாம் சமையலுக்கு நறுக்கும் காய்கறிகளின் தோலை மட்டும் எடுத்து அதில் போட்டு அதன் மேலே ஒரு பிடி மண்ணை தெளித்து விட வேண்டும். தினமும் இதேபோல் நாம் போடும் குப்பையையும் அதன் மேல் ஒரு பிடி மண்ணையும் போட்டுக் கொண்டே வர வேண்டும். அந்த டப்பா நிரம்பிவிட்டால் அடுத்த டப்பாவில் இதே முறையில் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பதினைந்து இருபது நாட்களுக்குப் பிறகு நிரம்பிய டப்பாவில் இருக்கும் குப்பை மக்கி மண்ணாகி இருக்கும். இந்த குப்பையில் இருந்து எந்தவித துர்நாற்றமும் வருவதில்லை. இந்த உரம் மட்டுமே மிகவும் சத்துள்ளதாக மற்ற செடிகளுக்கு நல்ல உரமாக அமைந்துவிடுகிறது. அதேபோல் நாம் பாத்திரம் கழுவும் நீர், உணவுப் பொருட்களை கழுவும் நீர் போன்றவற்றையே கூட தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றலாம். வீட்டில் உபயோகிக்கும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக அரைத்து அதை தண்ணீரில் கலந்து பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தலாம்.
புளித்த மோரை கூட பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். நல்ல சத்தான பசுமையான காய்கறியை ஒருதடவை உங்கள் வீட்டு உறுப்பினர்களுக்கு சமைத்துக் கொடுத்து பாருங்கள் அவர்களே உங்களுக்கு உறுதுணையாக வந்து மாடித்தோட்டம் அமைக்க உதவுவார்கள். அரசு தோட்டக்கலைத்துறை கூட இதற்காக மானிய விலையில் நீங்களே மாடித் தோட்டம் போடலாம் என்று செய்முறை பொருட்களை கொடுக்கிறது சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மாடித்தோட்டம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..